மிகப்பெரிய வியாழன் கிரகம்
சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கிரகம் என்ற பெருமையைப் பெற்றது வியாழனாகும். மிகப்பெரிய கிரகமாக விளங்கும் வியாழனை, ஆங்கிலத்தில் ரோமானிய ஆட்சிக் கடவுளான ஜூபிடரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
சூரியனிலிருந்து ஐந்தாவதாக உள்ள வியாழன் கிரகம், விண்வெளியில் சூரியன், நிலா, வெள்ளி கிரகங்களுக்கு அடுத்தபடியாக பிரகாசமாகத் தெரியக் கூடிய கிரகமாகும்.
இது 88,736 மை அதாவது 1,42,800 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. வியாழனின் சுற்றளவு பூமியைப் போல 11 மடங்கு அதிகமாகும்.
வியாழன் கிரகத்திற்கு உள்ளத் துணைக் கிரகங்களில் இதுவரை 28 கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 1610ஆம் ஆண்டில் நான்கு துணை கிரகங்களை கலிலியோ கண்டுபிடித்தார்.
இந்த கிரகம் முழுவதும் வாயுக்களால் நிரம்பி உள்ளது. இந்த வாயுக்களின் பிரதிபலிப்பால்தான் இந்த கிரகம் பிரகாசமாகக் காட்சி அளிக்கிறது. அதிகப்படியான வாயுக்களால் இந்த கிரகத்தில் கடுமையான ஒரு அழுத்த நிலை காணப்படுகிறது.
ஆனால் ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற கனமற்ற வாயுக்கள் நிரம்பியிருப்பதால் பூமியை விட வியாழன் அடர்த்தி குறைவானதாக உள்ளது.
வியாழன் கிரகத்துக்குள் அடிக்கடி புயல்கள் அடிக்கும். மூன்று பூமிக்கு இணையான பரப்பளவில் வீசிய ஒரு புயல், பல நூறு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. தொலைநோக்கியால் பார்த்தால் வியாழன் கிரகத்தின் நிலாக்களைக் காணலாம்.
கடந்த 1995-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அனுப்பிய கலீலியோ விண்கலத்தில் இருந்த சென்ற ஆய்வுக்கலம், வியாழன் கிரகத்தின் உள்பகுதி படங்களை எடுத்து அனுப்பியது.
கலீலியோ, பூமியில் இருந்து வியாழன் கிரகத்தை சென்று அடைவதற்கு 6 ஆண்டுகள் ஆயின. இவ்வளவு ஆண்டுகாலம் பயணித்து அந்த கலம் ஒரு மணி நேரத்தில் நசுங்கிவிட்டது என்றால் நம்புவீர்களா? ஆம் வியாழன் கிரகத்தில் நிலவும் கடுமையான அழுத்தத்தால் நசுக்கப்பட்ட ஆய்வு கலத்தால் அங்கு ஒரு மணி நேரமே தாக்குப் பிடிக்க முடிந்தது. ஆனால் அதற்குள் அக்கலம் பல முக்கியமான தகவல்களை பூமிக்கு அனுப்பி விட்டது.
எதிர்காலத்தில் வியாழன் கிரகத்திற்குச் செல்லும் விண்கலங்கள், கிரகத்திற்குள் நிலவும் அதிக அழுத்தத்தைத் தாங்கும் வசதியைப் பெற்றிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.