3 இந்திய ரயில்களுக்கு உலகளவில் சிறப்பு அந்தஸ்து!

by Nirmala 2010-02-16 18:32:03

3 இந்திய ரயில்களுக்கு உலகளவில் சிறப்பு அந்தஸ்து!
இந்தியாவின் பாரம்பரியமிக்க மூன்று ரயில்கள் உலகின் சிறந்த 25 சாகச ரயில்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

மத்திய கிழக்கு ஆசியாவின் ஈஸ்டர்ன் அன்ட் ஓரியன்டல் எக்ஸ்பிரஸ், சீனாவின் ஷாங்காய்-லா எக்ஸ்பிரஸ் ஆகிய ஆசிய ரயில்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அமெரிக்காவில் உள்ள சர்வதேச ரயில் பயணிகள் சங்கம் (எஸ்.ஐ.ஆர்.டி.,) வெளியிட்டுள்ள 25வது ஆண்டு விழா மலரில் இத்தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் அளிக்கப்படும் சேவை, வசதிகள், வடிவமைப்பு, முக்கிய குறிப்புகள், பயணிகளின் மகிழ்ச்சி, பயணத்தால் கிடைக்கும் சிறந்த அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ரயில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

"தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த 25 ரயில்களும், ரயில் பயணத்தை விரும்புவர்களால் மிகவும் நேசிக்கப்படுபவை" என்று எஸ்.ஐ.ஆர்.டி. முதன்மை அதிகாரி எலிநோர் ஹார்டி கூறியுள்ளார்.

டெல்லியில் இருந்து ராஜஸ்தானுக்கு செல்லும் ரயில் உலகத்தரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய 14 ஏ.சி. டீலக்ஸ் அறைகளை கொண்டுள்ளது. இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் இந்த ரயில்களில் செல்வது மறக்கமுடியாத அனுபவத்தை அளிக்கிறது. கண்கவரும் அழகிய வேலைப்பாடுகளைக் கொண்ட ஒவ்வொரு பெட்டியிலும் அனைத்து விதமான பானங்களும் வழங்கப்படுகின்றன. ஓய்வெடுக்கவும், கூடி குலாவவும் பிரத்யேக இட வசதி உள்ளது.

எஸ்.ஐ.ஆர்.டி. வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் இரண்டாவது ரயிலான 'டாய்' அல்லது 'தி டார்ஜிலிங் இமாலயன்' என்ற ரயில் சில்லிகுரியில் இருந்து டார்ஜிலிங் வரை செல்கிறது. கடந்த 1879-81ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட இந்த ரயில் தற்போதும் நீராவி இன்ஜினால் இயக்கப்படுகிறது. இந்த ரயில் 1999ம் ஆண்டு யுனஸ்கோவால் உலகின் பாரம்பரியமிக்க ரயில் என்று அறிவிக்கப்படடுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மூன்றாவது ரயிலான 'டெக்கான் ஒடிஸ்சி' மத்திய இந்தியாவில் இருந்து மும்பை, ரத்னகிரி, ஸவந்த்வாடி, கோவா, புனே, ஔரங்காபாத், நாசிக் ஆகிய பகுதிகளுக்கு எட்டு நாட்கள் பயணிக்கிறது. மொத்தம் 21 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் 11 பெட்டிகள் பாசஞ்சர் அறை மற்றும் இரண்டு பெட்டிகள் பிரிசிடென்சியல் சூட் அறை. இதுதவிர கருத்தரங்கு அறை, உணவு அறை, உடற்பயிற்சி அறை, நடமாடும் அறை என பல வசதிகளை கொண்டுள்ளது.

இந்தியாவின் இந்த மூன்று ரயில்கள் உலகின் சிறந்த ரயில்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும் கனடியன், ராயல் கனடியன் பசுபிக், கனடியன் ராக்கிஸ் ஸ்டீம் எக்ஸ்பிரஸ், ராக்கி மவுன்டெய்னர் ஆகிய கனடா நாட்டு ரயில்கள் தான் முன்னிலை வகிக்கின்றன. வட அமெரிக்காவை சேர்ந்த கிராண்ட்லக்ஸ் எக்ஸ்பிரஸ் (அமெரிக்கா), சியிரா மெட்ரி எக்ஸ்பிரஸ் (மெக்சிகோ) ஆகிய ரயில்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
1896
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments