அரபிக் கடற்கரையில் அழகிய கோட்டை

by Nirmala 2010-02-16 18:39:02

அரபிக் கடற்கரையில் அழகிய கோட்டை


அழகிய அரபிக் கடற்கரையோரத்தில் 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இன்று வரை நமது நாட்டின் தொல்லியல் துறையால் மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் ஒரு சுற்றுலாத் தலத்தை கேரளத்தில் கண்டோம்.

கேரள மாநிலம், கண்ணணூர் நகரில் இருந்து சற்றேறக்குறைய 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது செயின்ட் ஆஞ்சலோ கோட்டை.

இந்தியாவின் மேற்குக் கரையில் இறங்கி தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்ட போர்ச்சுக்கீசியர்கள் 1745ஆம் ஆண்டு கட்டியதுதான் செயின்ட் ஆஞ்சலோ கோட்டையாகும்.


வடக்கு முகமாக அமைந்துள்ள நுழைவாயிலில் சென்று கோட்டைக்குள் நுழைந்து, படிகளின் வழியாக மேலேறி சென்று பார்த்தால் அரபிக் கடலை ஒட்டி பல ஏக்கர்கள் நிலப்பரப்பில் விசாலமாகக் கட்டப்பட்ட உறுதியான கோட்டையைக் காணலாம்.

முப்பது அடி உயர மதில் சுவர்கள், அதன் மீது ஆங்காங்கு அமைக்கப்பட்ட பீரங்கிகள், கண்காணிப்புக் கோபுரம், கோட்டையின் மதில் சுவரை ஒட்டி சற்றேறக்குறைய 50 அடி அகலத்திற்கு வெட்டப்பட்டுள்ள அகழி என்று ஒரு கோட்டைக்குரிய அனைத்து அம்சங்களுடனும் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது.

கோட்டையில் இருந்து படகுத் துறைக்குச் செல்வதற்கு தனி வழி உள்ளது. கோட்டையில் இருப்பவர்களுக்கு கடலில் இருந்து ஆபத்து வந்தால் அதனை தடுத்து நிறுத்துவதற்கு வரிசையாக பீரங்கிகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன.


அந்த பீரங்கிகளுக்குப் பின்னால் ஆங்காங்கு நீண்ட தூரம் உள்ள இலக்குகளை தாக்கக் கூடிய பெரிய பீரங்கிகள் என்று மிக ராஜ தந்திரத்துடன் அமைந்துள்ளது இக்கோட்டை.

கோட்டையின் அழகு ஒருபக்கம் என்றால், கோட்டையில் இருந்து அரபிக் கடலின் அழகும், அரபிக் கடல் அலைகள் கோட்டையின் மதில் சுவர்களில் மோதித் திரும்பும் அழகும், அலைகளின் சீற்றத்தால் உட்புகும் தண்ணீர் அகழிகளை நிரப்புவதற்கென்றே செய்யப்பட்டுள்ள வடிவமைப்பும் நெஞ்சை நிரப்புகின்றன.

கேரள கரையில் அமைந்துள்ள இக்கோட்டையில் இருந்து சற்று தூரத்திற்குச் சென்று பாறைகள் நிறைந்த அந்தக் கடற்கரையோரத்தில் நடந்து சென்று மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்கலாம்.

கண்ணணூருக்கு அருகே இரண்டு அழகான கடலோரங்கள் உள்ளன. நமது மெரினா, பெசன்ட்நகர் கடற்கரைகளைப் போல அங்குள்ள கடற்கரைகளும் அழகானவை. அத்தோடு இந்த கோட்டையையும் கண்டு களிக்க நிச்சயம் செல்லலாம் ஒரு முறையாவது கண்ணணூருக்கு.


சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் ரயிலில் ஒரு இரவு பயணத்தில் கண்ணணூரை அடையலாம். தங்கும் இடங்களும் உணவும் சராசரி விலையில் உள்ளன. இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள இங்கு அல்வா மிகப் பிரபலம்.
1893
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments