பேச்சுத்தமிழ் - உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்

by Geethalakshmi 2010-02-28 22:14:16

பேச்சுத்தமிழ் - உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்


தமிழ், அதன் பல் வேறுபட்ட வட்டார வழக்குகளுக்கு மேலதிகமாக, இலக்கியங்களில் பயன்படும் முறையான செந்தமிழுக்கும், கொடுந்தமிழ் என வழங்கப்படும் பேச்சுத் தமிழுக்கும் இடையே தெளிவான இருவடிவத் தன்மை (diglossia) காணப்படுகின்றது. இங்கே கொடுந்தமிழ் என்பது அனைத்து வட்டாரப் பேச்சுத் தமிழ் வழக்குகளையும் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொற் பயன்பாடு ஆகும். இந்த இருவடிவத் தன்மை பண்டைக் காலம் முதலே தமிழில் இருந்து வருவதை, கோயில் கல்வெட்டுக்களிற் காணப்படும் தமிழ், சமகால இலக்கியத் தமிழினின்றும் குறிப்பிடத் தக்க அளவு வேறுபட்டுக் காணப்படுவதினின்றும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு, செந்தமிழ் எந்த வட்டார மொழி வழக்கையும் சாராது இருப்பதனால், எழுத்துத் தமிழ், தமிழ் வழங்கும் பல்வேறு பகுதிகளிலும், ஒன்றாகவே இருப்பதைக் காணலாம்.

தற்காலத்தில், எழுதுவதற்கும், மேடைப் பேச்சுக்கும் செந்தமிழே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, செந்தமிழ், பாட நூல்களுக்குரிய மொழியாகவும், பெருமளவுக்கு இலக்கிய மொழியாகவும், மேடைப் பேச்சுகளுக்கும், விவாதங்களுக்கும் உரிய மொழியாகவும் விளங்கிவருகிறது. அண்மைக் காலங்களில், மரபு வழியில், செந்தமிழுக்குரிய துறைகளாக இருந்து வந்த பகுதிகளிலும் கொடுந்தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது. பெரும்பாலான தற்காலத் திரைப்படங்கள், மேடை நாடகம் மற்றும் தொலைக் காட்சி, வானொலி முதலியவற்றில் இடம்பெறும் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் பலவற்றிலும் கொடுந்தமிழ் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பல அரசியல் வாதிகளும், மக்களுக்கு நெருக்கமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் நோக்கில் தங்கள் மேடைப் பேச்சுக்களிலும் கொடுந்தமிழைப் பயன்படுத்தி வருகின்றனர்.

செந்தமிழுக்கான இலக்கண விதிகள் இறைவனால் உருவாக்கப் பட்டதாக நம்பப்படுவதால், செந்தமிழே சரியான மொழியாகக் கருதப்பட்டது. இதனால், பேச்சுத் தமிழ் வழக்குகளுக்குச் சிறப்புக் கிடைக்கவில்லை. (எடுத்துக்காட்டு, காங்கேயர் (Kankeyar), 1840). பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு மாறாக, தமிழில், அதன் வரலாற்றின் பெரும் பகுதியிலும், ஒரு பொதுவான பேச்சுமொழி இருந்ததில்லை. தற்காலத்தில் அதிகரித்த கொடுந்தமிழ்ப் பயன்பாடு, அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளது. இந்தியாவில் பொதுக் கொடுந்தமிழ், 'படித்த, பிராமணரல்லாதவர்'களின் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது (Schiffman, 199Cool
. எனினும் குறிப்பிடத் தக்க அளவுக்கு, தஞ்சாவூர் மற்றும் மதுரைப் பேச்சு வழக்குகளில் செல்வாக்கு உள்ளது. இலங்கையில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையே பெரும்பாலான வெளியார் இலங்கைத் தமிழ்ப் பேச்சு வழக்காக இனங்கண்டு கொள்கின்றனர்.
1434
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments