தமிழ் எழுத்து முறை
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 22:14:46
தமிழ் எழுத்து முறை
தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியில் இருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது.
வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
பின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977 எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும் பெரியாரது உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை.