ஒலிப்பியல்

by Geethalakshmi 2010-02-28 22:17:33

ஒலிப்பியல்


பெரும்பாலான இந்திய மொழிகளைப் போலன்றி தமிழில் மூச்சைக்கொண்டு ஒலிக்கும் (aspirated) மெய்யெழுத்துக்கள் கிடையாது. பேச்சில் வழங்கி வரினும், தமிழ் எழுத்து மிடற்றொலிகளையும் (voiced sounds) பிற ஒலிகளையும் வேறுபடுத்துவதில்லை. மிடற்றொலிகளும் அவற்றின் இனமான பிற ஒலிகளும் தமிழில் வகையொலிகள் (allophones) அல்ல. தமிழர் பொதுவாக இவ்வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றனர். மேலும், தொல்காப்பியத்தில் ஒரு எழுத்தை எப்பொழுது மிடற்றிலிருந்து ஒலிக்க வேண்டும் என்பது பற்றிய வரைமுறை விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, "த" எனும் மெய்யொலி சொல்லின் முதலில் வரும்பொழுது மிடற்றொலியாகவும், பிற இடங்களில் ஒற்றிரட்டித்தோ, வேறோரு வல்லெழுத்தால் தொடரப்பட்டோ, அல்லது மிடறு நீங்கியோ ஒலிக்கும்.


சொல்லின் முதலில் சகரம் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டும் என்ற நெறியைத் தவிர பிற நெறிமுறைகள் செந்தமிழில் பொதுவாகப் பின்பற்றப்படுகின்றன. கொடுந்தமிழ் அல்லது வழக்குத்தமிழில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஏற்ப ஒலிப்புமுறை வேறுபடுகிறது. தென்வட்டார வழக்குகளிலும் இலங்கை வழக்குகளிலும் இம்முறை பெரும்பாலும், ஆனால் முழுமையாகவல்லாமல், பின்பற்றப்படுகிறது. வடபகுதி வட்டார வழக்குகளில் ஒலிப்பெயர்வு ஏற்பட்டு ஒலிப்புநெறிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவை தவிர, சமஸ்கிருதம் மற்றும் பிற வடமொழிகளிலிருந்து பெறப்பட்ட சொற்கள் தமிழில் பெரிதும் உள்ளபடியே பயன்படுத்தப்படுகின்றன.


தமிழ் எழுத்தில் ஏன் மிடற்றொலி மற்றும் பிறவொலி வேறுபாடுகள் இல்லையென்ற கேள்விக்கு ஒலிப்பியலாளர்கள் நடுவே ஒருமித்த கருத்து இல்லை. ஒரு சாரார் தமிழ் மொழியில் கூட்டுமெய்களும் மிடற்றினின்றொலிக்கும் வல்லெழுத்துக்களோ அடிப்படையில் இருந்ததில்லையென்றும் சொற்புணர்ச்சி மற்றும் குறுக்கத்தினால் மட்டுமே இவ்வொலிகள் ஏற்படுகின்றன என்று குறிப்பிடுகின்றனர். அதனால், இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் மற்றும் பிற திராவிட மொழிகளைப் போலன்றி தமிழில் இவ்வொலிகளுக்கென தனியெழுத்துக்கள் தேவைப்படவில்லை என்று கருதுகின்றனர். இக்கருத்திலிருந்து மாறுபட்டு மிடற்றொலிகள் அவற்றையொத்த பிற ஒலிகளின் வகையொலிகளாகவே தமிழில் இருந்துள்ளன என்றும் அதனாலேயே அவற்றிற்கென தனியாக எழுத்துக்குறிகள் இல்லையெனவும் ஒரு கருத்தை சிலர் முன்வைக்கின்றனர்.
1488
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments