சொல் வளம்
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 22:19:09
சொல் வளம்
தமிழ் சொல் வளம் நிறைந்த மொழி. நவீனத் தமிழ்மொழி பழந்தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொற்களை இன்னும் பயன்படுத்துகின்றது. இதனால் சற்று பயிற்சியுடன் பழந்தமிழ் இலக்கியங்களை ஒரு தமிழர் படித்து அறிய முடியும். திருக்குறள் போன்ற சிறந்த பழந்தமிழ் படைப்புகள் தமிழர்களால் சிறப்பாக கற்கப்படுவதற்கு இத்தொடர்ச்சியான சொற்பயன்பாடு உதவுகின்றது.
சமஸ்கிருத சொற்கள் தொல்காப்பியர் காலம் முதலே தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டு தகுந்த பல தளங்களில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. சமயம் சார்பான சமஸ்கிருத சொற்பயன்பாடுகள் தமிழில் அதிகம் காணப்படுகின்றன. சமஸ்கிருத உச்சரிப்புக்களைத் தமிழில் உள்வாங்குவதற்கு கிரந்த எழுத்துக்கள் பயன்படுகின்றன.
தமிழின் நீண்ட வரலாற்றில் பல பிறமொழிச்சொற்கள் தமிழில் கலந்து, தமிழ்படுத்தப்பட்டு தமிழை வளமாக்கியுள்ளன. பாரசிக, அரபு போன்ற செம்மொழிகளில் இருந்தும், பிற திராவிட மொழிகளில் இருந்தும், போர்த்துகீசிய, டச்சு, பிரேஞ்சு போன்ற காலனித்துவ மொழிகளில் இருந்தும், இந்தி, சிங்களம், மலாய் போன்ற தமிழருடன் தொடர்புடைய பிற இனங்களின் மொழிகளில் இருந்த்தும், ஆங்கில மொழியில் இருந்தும் தமிழ் மொழிக்கு பல சொற்கள் வந்தடைந்துள்ளன.
பிறமொழிச் சொற்கள் மட்டுப்படுத்தப்பட்டில் இருப்பது தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் தனித்துவத்துக்கும் அவசியம். ஆகையால் பிற மொழிச்சொற்களுக்கு இணையான தமிழ் மொழியின் அடிச்சொற்களில் இருந்து உருவாக்கப்படும் சொற்களை பயன்படுத்துவதே நன்று என்பது பல எளிய தமிழ் ஆதரவாளர்களின் கருத்து. இக்காலத்தில் குறிப்பாக ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் அடிச்சொற்களில் இருந்து உருவாக்கப்பட்ட சொற்கள் பயன்படுத்தப்படவேண்டும் என்பது பல தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகோளாக அமைகின்றது.