தமிழ் அகராதியின் தோற்றம்
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 22:24:03
தமிழ் அகராதியின் தோற்றம்
தமிழில் அகராதிகள் தோன்றுவதற்குமுன் தமிழ்ச் சொற்களின் பொருள்களை அறிந்துகொள்வதற்குப் பயன்பட்டவை நிகண்டுகள் எனப்பட்ட நூல்களாகும். நிகண்டுகளிலே சொற்கள் பொருள் அடிப்படையிலே, தெய்வப் பெயர்கள், மக்கட் பெயர்கள் என்று தொகுதிகளாகக் கொடுக்கப்பட்டிருக்கும். இதுவும் செய்யுள் வடிவத்திலேயே இருக்கும். நிகண்டுகளை மனப்பாடமாக வைத்திருப்பவர்களுக்கே அன்றி மற்றவர்கள் இவற்றிலிருந்து ஒரு சொல்லுக்கான பொருளைத் தேடி அறிதல் மிகவும் கடினமானது. நிகண்டுகளிலுள்ள இக் குறைபாடுகளை நீக்கி எல்லோருக்கும் இலகுவாகப் பயன்படத்தக்க முறையில் சொற்களை ஒழுங்கு படுத்துவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருந்தன. இந்த வரிசையிலே இரேவண சித்தர் என்பவர் ஆக்கிய அகராதி நிகண்டு என்பது ஒரு முக்கியமான திருப்பமாகும். இதிலே சொற்களின் முதலெழுத்துக்கள் மட்டுமே அகர வரிசையில் அமைக்கப்பட்டிருந்தன. இங்கே அகராதி என்பது ஒரு அடைமொழியாக மட்டுமே பயன்படுத்தப் பட்டிருந்தது. முறையான அகராதி முன்னர் குறிப்பிட்டபடி, கான்ஸ்டன்ஷியுஸ் பெஸ்கி யால் 1792 ல் வெளியிடப்பட்டது.