குற்றியலுகரம்
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 22:28:21
குற்றியலுகரம்
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா கு, சு, டு, து) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துக்கள் (எ.கா: ற, கி, பெ, ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது.
இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்
(குறுகிய ஓசையுடைய உகரம்)
எ.கா:
நாடு என்னும் தமிழ்ச் சொல்லில், கடைசியில் வரும் டு என்னும் எழுத்து (உகரம் ஏறிய ட் என்னும் வல்லின எழுத்து), தன் இயல்பான ஒரு மாத்திரை அளவு நீட்டிக்காமல், அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் தனி நெடிலுடன், வல்லின மெய்யோடு (ட்) சேர்ந்த உகரம் (டு)வந்துள்ளதைப் பார்க்கலாம். இவ்வுகரம் அரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.
பந்து என்னும் சொல்லில் கடைசியாக உள்ள து என்னும் எழுத்து அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் பல் எழுத்துகளைத் தொடர்ந்து இறுதியில் வல்லின மெய்யோடு (த்) சேர்ந்த உகரம் (து)வந்துள்ளது. இவ்வுகரம் அரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.
இதே போல பருப்பு, சிறப்பு, நேற்று, வேட்டு, பேச்சு, கொடுக்கு, மத்து போன்றசொற்களில் கடைசியில் வரும் உகரம் ஏறிய வல்லின மெய்கள் குற்றியலுகரம் ஆகும்.
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், குறைந்து ஒலிக்கும் உகரமே குற்றியலுகரம்.