எழுத்துக்களின் கால அளவுகள்
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 22:53:55
எழுத்துக்களின் கால அளவுகள்
குறில் எழுத்துக்களின் ஒலி அளவு ஒரு மாத்திரை அளவினதாகக் கொள்ளப்படுகின்றது. இதன் அடிப்படையில் நெடில் எழுத்துக்களின் கால அளவு இரண்டு மாத்திரைகளாகவும், மெய்யெழுத்துக்களின் கால அளவு அரை மாத்திரைகளாகவும் உள்ளன. உயிர்மெய்க் குறில்களினதும், உயிர்மெய் நெடில்களினதும் கால அளவுகளும், முறையே ஒரு மாத்திரையாகவும், இரண்டு மாத்திரைகளாகவும் உள்ளன.
ஐகார, ஔகார எழுத்துக்கள் நெடில்களாகக் கொள்ளப்பட்டாலும், அவை சீர்களில் வரும்போது இரண்டு மாத்திரைகள் அளவுடன் ஒலிப்பதில்லை. இவ்விரு வகை எழுத்துக்களும் சீர் முதலெழுத்தாக வரும்போது ஒன்றரை மாத்திரைகள் அளவுடையனவாக அமைகின்றன. ஔகாரம் முதலெழுத்தாக மட்டுமே வரும். ஐகாரம் இடையிலோ அல்லது இறுதி எழுத்தாகவோ வரும்பொழுது குறில்களைப் போல ஒரு மாத்திரை அளவையே கொண்டிருக்கும். இவ்வாறு ஒலி குறைவுபட்டு வருதல் குறுக்கம் எனப்படுகின்றது. ஐகாரம் குறுகி வருதல் ஐகாரக் குறுக்கம் எனவும், ஔகாரம் குறுகி வருதல் ஔகாரக் குறுக்கம் எனவும் குறிப்பிடப்படுகின்றன. இவற்றைப்போலவே சில சந்தர்ப்பங்களில் இகர, உகரங்களும் மெய்யெழுத்தான மகரமும் குறுக்கம் அடைவதுண்டு. இவ்வாறு குறுக்கமடையும்போது இகரமும், உகரமும் அரை மாத்திரையையும், மகரமெய் கால் மாத்திரையையும் பெறுகின்றன. குறுகி ஒலிக்கும் இகர, உகரங்கள் முறையே குற்றியலிகரம் எனவும், குற்றியலுகரம் எனவும் அழைக்கப்படுகின்றன. மகரமெய் குறுகி ஒலித்தல் மகரக்குறுக்கம் எனப்படும்.