செய்யுள்
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 23:10:13
செய்யுள்
செய்யுள் என்பது எடுத்துக்கொண்ட பொருள் விளங்கச் சுருக்கமாகச் செய்யப்படுவது. செய்யப்படுவதனால் இது செய்யுள் எனப்படுகின்றது. செய்யுள்கள் ஒரு இலக்கண வரம்புக்கு உட்பட்டே அமையவேண்டும். உரைநடைகளைப் போல் விரும்பியவாறு விரிவாகவும், வரையறை இல்லாமலும் எழுதக்கூடிய தன்மை செய்யுள்களுக்கு இல்லாவிட்டாலும், செய்யுள்கள் ஓசை நயம் விளங்கச் செய்யப்படுகின்றன. இதனால் செய்யுள்கள் மனப்பாடம் செய்வதற்கு இலகுவானவை. எழுத்துமூல நூல்கள் பரவலாகக் கிடைப்பதற்கு அரிதாக இருந்த பழங்காலத்தில் அரிய நூல்களில் சொல்லப்பட்டவற்றைத் தேவையானபோது நினைவுக்குக் கொண்டுவரவும், அவை பல தலைமுறைகள் நிலைத்து நிற்பதற்கும் மனப்பாடம் செய்வது இன்றியமையாததாக இருந்தது. இதனால் அக்காலத்து நூல்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே இயற்றப்பட்டன.