தமிழ் மரபுக் கவிதைகளின் அடிப்படைக் கூறுகள்
by Geethalakshmi[ Edit ] 2010-02-28 23:16:28
தமிழ் மரபுக் கவிதைகளின் அடிப்படைக் கூறுகள்
உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துக்களும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துக்களின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். அசை என்பது முழுச்சொல்லாக இருக்க வேண்டும் என்பதல்ல, சொல்லின் பகுதிகளாகவும் இருக்கலாம்.
நேரசை மற்றும் நிரையசை என்று அசைகள் இரண்டு வகையாகும். குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ (ஒற்று = புள்ளி வைத்த எழுத்து) வருதல் நேரசையாகும். எடுத்துக்காட்டாக நேர், என், நீ, தேன் முதலான சொற்கள் நேரசைச் சொற்கள். இவ்வாறில்லாது இருகுறிலிணைந்து வருதலும், குறிலுக்குப் பின் நெடிலிணைந்து வருதலும், அல்லது இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். நிரை, படம், புறா முதலான சொற்கள் நிரையசை யாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன.