மொழியியல்

by Geethalakshmi 2010-02-28 23:44:38

மொழியியல்


பரந்த நோக்கில் பார்க்கும்போது, மொழியியல் என்பது மனித மொழி பற்றி ஆராயும் ஒரு துறையாகும். இதில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் மொழியியலாளர் எனப்படுகிறார். மொழியியல் ஆய்வு, கீழே தரப்பட்டுள்ள மூன்று விதமான அடிப்படைகளில் நடைபெறுவதாகக் காணப்படுகிறது.

* விளக்கமுறையும் வரலாற்றுமுறையும் (Synchronic and diachronic) -- விளக்கமுறை, என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மொழியின் நிலையைக் கருத்திலெடுத்து ஆய்வு செய்வதைக் குறிக்கும். வரலாற்றுமுறை என்பது ஒரு மொழியின் அல்லது ஒரு மொழிக் குழுவின் வரலாற்றையும், அவற்றில் எவ்வாறான அமைப்பு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் ஆராய்வதாகும்.

* கோட்பாட்டு மற்றும் பயன்பாட்டு முறை -- கோட்பாட்டு மொழியியல், தனிப்பட்ட மொழிகளை விவரிப்பதற்கான சட்டகங்களை (frameworks) உருவாக்குவதுடன், அனைத்து மொழிகள் தொடர்பான கோட்பாடுகள் பற்றியும் கவனத்திற் கொண்டுள்ளது.

* சூழ்நிலைசார் மற்றும் சுதந்திரமான -- இப்பகுப்பு தொடர்பில் சொற்கள் சரியாக நிலைநிறுத்தப்படாததால், வசதி கருதி இப் பெயர்கள் இங்கே பயன்படுத்தப் படுகின்றன. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் பெரு மொழியியல் (macrolinguistics), நுண் மொழியியல் (microlinguistics), என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறது. சூழல்சார் மொழியியல், ஒரு மொழி எவ்வாறு இந்த உலகத்துடன் பொருத்தப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை, அதன் சமூகச் செயற்பாடு, எவ்வாறு பெறப்பட்டது, எவ்வாறு உருவானது மற்றும் எவ்வாறு நோக்கப்படுகிறது என்பவற்றைக் கருத்திலெடுத்து ஆராய்கின்றது.சுதந்திர மொழியியல், மொழிகளின் புறநிலை அம்சங்களைக் கருத்தில்கொள்ளாது, அம் மொழிகளைத் தனியாக ஆராய முற்படுகிறது.

இவ்வாறான பகுப்புகள் இருந்தாலும், பொதுவாக எவ்வித சிறப்பு அடைமொழிகளுமில்லாது, வெறுமனே "மொழியியலாளர்கள்" என்று அழைக்கப்படுபவர்கள், மொழியியலின் மையக்கருவாகக் கருதப்படும் சுதந்திர, கோட்பாட்டு விளக்கமுறை (synchronic) மொழியியல் பற்றியே முக்கியமாக ஆர்வமுடையவர்களாக உள்ளார்கள். இதுவே பொதுவாகக் "கோட்பாட்டு மொழியியல்" என்று அழைக்கப்படுகிறது.
1889
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments