திருமுருகாற்றுப்படை
by Geethalakshmi[ Edit ] 2010-03-01 00:01:17
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. பன்னிரு திருமுறை பகுப்பில் இது பதினோராவது திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது.இதுகடைச்சங்கநூல்களில் ஒன்றுஎன்பது மரபுவழிச்செய்தியாகும். இதுபிற்காலத்தில் எழுந்தநூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். "முருகாற்றுப்படை" எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று.
திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி(இந்நாளில் பழநி என்றுவழங்கப்படுவது), திருவேரகம்(சுவாமிமலை) , குன்றுதோறாடல், பழமுதிர் சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன.