அசை எழுத்து முறைமைகள்

by Geethalakshmi 2010-03-01 00:35:29

அசை எழுத்து முறைமைகள்


உருபனெழுத்து முறைமைகள் ஒரு முழுச் சொல்லுக்கு ஒரு குறியீட்டையே பயன்படுத்துகின்றவேளை, அசையெழுத்து, சொற்களை உருவாக்கும் அசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எழுதப்பட்ட ஒரு தொகுதி குறியீடுகளைக் கொண்டுள்ளது. அசையெழுத்துக்களில் உள்ள ஒரு குறியீடு பொதுப்படையாக மெய்யொலியையும் அதைத் தொடர்ந்து வரும் உயிரொலியையும் கூட்டாகவோ; அதாவது ஒரு உயிர்மெய்யொலியையோ அல்லது தனியாக ஒரு உயிரொலியையோ குறிக்கின்றது. ஒரு உண்மையான அசையெழுத்து முறையில், ஒத்த ஒலியமைப்பையுடைய எழுத்துக்களிடையே ஒழுங்கு முறையிலமைந்த வரைபு ஒப்புமை இருப்பதில்லை (சில முறைமைகளில் உயிரெழுத்துக்களில் இவ்வாறான ஒற்றுமை காணப்படுகின்றது). அதாவது, "கே", "க", மற்றும் "கோ" போன்றவற்றைக் குறிக்கும் எழுத்துக்களிடையே ஒரு பொது "க்" தன்மையைக் காணமுடியாது.

ஜப்பானிய மொழியைப்போல் ஒப்பீட்டளவில் எளிமையான அசை அமைப்பைக் கொண்ட மொழிகளுக்கே அசையெழுத்து முறை மிகவும் பொருத்தமானது. ஆங்கில மொழியைப் போன்ற சிக்கலான அசை அமைப்பையும், பெருமளவிலான மெய்யொலிகளையும், சிக்கலான மெய்யொலிக் கூட்டங்களையும் கொண்ட மொழிகளில் சொற்களை அசையெழுத்து முறையில் எழுதுவது கடினமாகும். அமையக்கூடிய ஒவ்வொரு அசைக்கும் ஒரு எழுத்துப்படி ஜப்பானிய மொழியில் 100 எழுத்துக்களுக்குமேல் கிடையா. ஆங்கிலத்தை இதேமுறையில் எழுதுவதாயின் பல ஆயிரம் எழுத்துக்கள் வேண்டியிருக்கும் எனக்கூறப்படுகிறது.

அசை எழுத்து முறைமையைப் பயன்படுத்தும் மொழிகளுள் பின்வருவனவும் அடங்கும். மைசீனியன் (Mycenaean) கிரேக்கமொழி (லீனியர் B) மற்றும் செரோக்கீ போன்ற உள்ளூர் அமெரிக்க மொழிகள். பழங்கால அண்மைக் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த பல மொழிகள், சில அசை அல்லாத அம்சங்களையும் கொண்ட அசையெழுத்து முறையிலான ஆப்பெழுத்து வடிவங்களைப் பயன்படுத்தின.

முழு அசையெழுத்துக்களின் பட்டியலுக்கு எழுத்து முறைமைகளின் பட்டியல் பார்க்கவும்.
1495
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments