ஒலியன் எழுத்து முறைமை

by Geethalakshmi 2010-03-01 00:35:55

ஒலியன் எழுத்து முறைமை


ஒலியனெழுத்து (Alphabetic) என்பது ஒவ்வொன்றும், பேச்சு மொழியொன்றிலுள்ள, ஒரு ஒலியனை, அண்ணளவாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது பிரதிநிதித்துவப்படுத்திய சிற்றளவிலான எழுத்துக்களைக் கொண்ட தொகுதி - அடிப்படையான குறியீடுகள் - ஆகும். ஆங்கிலத்தில் இச் சொல்லைக் குறிக்கும் "அல்பபெட்" (alphabet) என்னும் சொல், கிரேக்க அரிச்சுவடியின் முதல் இரண்டு எழுத்துக்களான "அல்பா", "பீட்டா" என்பவற்றைச் சேர்த்துப் பெறப்பட்டது.

ஒரு முழுமையான ஒலியன் எழுத்து முறைமையில் (phonological alphabet), ஒலியன்களும் (phoneme), எழுத்துக்களும் ஒன்றுடனொன்று இரண்டு திசைகளிலே முழுமையாகப் பொருந்தக்கூடியன: ஒரு சொல்லின் உச்சரிப்புக் கொடுக்கப்பட்டால், எழுதுபவர் ஒருவர் அதற்குரிய எழுத்துக்களைக் கண்டுகொள்ளக்கூடியதாகவும், சொல்லுக்குரிய எழுத்துக்கள் கொடுக்கப்படும்போது, பேசுபவரொருவர் அதன் உச்சரிப்பை அறியக்கூடியதாகவும் இருக்கும். ஒவ்வொரு மொழிக்கும், அதன் எழுத்துக்களுக்கும், ஒலியன்களுக்கும் இடையிலான கூட்டைக் (association) கட்டுப்படுத்தும் பொது விதிகள் உள்ளன. ஆனால், மொழிகளைப் பொறுத்து, இவ் விதிகள் ஒரு தன்மைத்தாகப் பின்பற்றப்படவோ அல்லது பின்பற்றப்படாமல் இருக்கவோ கூடும்.

முழுமையான ஒலியன் எழுத்துக்கள் பயன்படுத்துவதற்கும், பயிலுவதற்கும் இலகுவானது என்பதுடன், கல்வி வளர்ச்சியில் அவ்வாறான மொழிகள், சிக்கலானதும், ஒழுங்கற்றதுமான எழுத்துக்கூட்டு முறைகளைக் கொண்ட ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் குறைந்த தடைகளைக் கொண்டவையாகும். பொதுவாக மொழிகள் எழுத்துமுறைமைகளில் தங்கியிராமல் வளர்வதாலும், எழுத்து முறைமைகள், குறிப்பிட்ட மொழிகளுக்கென வடிவமைக்கப்படாது, வேறு மொழிகளிலிருந்து கடன் பெறுவது உண்டு என்பதாலும், ஒலியன்களும், எழுத்தும் ஒன்றுடனொன்று பொருந்தும் அளவு மொழிக்கு மொழி வேறுபடுகின்றது. சில சமயம் ஒரு மொழிக்குள்ளேயே வேறுபடுகின்றது. நவீன காலத்தில், மொழியியலாளர், ஏற்கெனவே எழுத்துமுறைகளைக் கொண்டிராத மொழிகளுக்குப் புதிய எழுத்துமுறைமைகளை உருவாக்கும்போது, முழுமையான ஒலியன் எழுத்து முறைமைகளை உருவாக்குவதே இலக்காக உள்ளது.

ஒலியன் எழுத்து (alphabet) பற்றிய மேலதிக விபரங்களுக்கு, ஒலியன் எழுத்து கட்டுரையைப் பார்க்கவும். எல்லா ஒலியன் எழுத்துக்களினதும் பட்டியலுக்கு எழுத்து முறைமைகளின் பட்டியல் பார்க்கவும்.
1568
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments