அகநானூறு

by Geethalakshmi 2010-03-01 00:42:30

அகநானூறு


அகநானூறு சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. நெடுந்தொகை என்ற பெயரும் இதற்கு உண்டு. இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒரே புலவராலோ அல்லது ஒரே காலத்திலேயோ இயற்றப்பட்டவை அல்ல. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன.

எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன. இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. அகத் த்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர். கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன.இவை களிற்றியானை நிரை(1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன. ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைபட எண்களில் 6 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.

இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர் எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.
1517
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments