சொற்பொருள் அம்சம்
by Geethalakshmi[ Edit ] 2010-03-01 01:00:03
சொற்பொருள் அம்சம்
மொழியியலில், சொற்பொருள் அம்சம் என்பது, குறிப்பிட்ட சொற்பொருள் இயல்புகள் இருப்பதையோ, இல்லாதிருப்பதையோ எடுத்துக்காட்டுவதற்குப் பயன்படுகின்ற குறியீட்டு முறையைக் குறிக்கும். இங்கே நேர் (+) மற்றும் எதிர் (-) அடையாளக் குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அறிமுகம்
பொருளின் (meaning) முக்கியத்துவம் பற்றிய கருத்து இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே முன்வைக்கப்பட்டபோதும், மொழியியலில் இதற்கு உரிய இடம் இருக்கவில்லை. பொருள் பற்றிய ஆய்வு மிக அண்மைக் காலத்திலேயே நவீன மொழியியலில் இடம்பெறத் தொடங்கியது. அமைப்பியல்வாதிகள் (structuralists), மொழியின் பொருள் பற்றிக் கவனம் செலுத்தாமலே மொழியைப் பற்றிய ஆய்வுகளை நடத்தி வந்தனர். மொழியியலின் ஒரு துணைத் துறையான சொற்றொடரியல் (Syntax) சொற்றொடர்களின் அமைப்புப் பற்றியே கவனம் செலுத்தியது. பொருள் ஆய்வின் முக்கியத்துவத்தை விளக்க நோம் சொம்ஸ்கி (Noam Chomsky) என்பார் 1957 இல், பின்வரும் சொற்றொடரை எடுத்துக்காட்டினார்.
colorless green ideas sleep furiously (நிறமற்ற பச்சை எண்ணங்கள் கடுங் கோபத்துடன் தூங்கின).
இச் சொற்றொடர், சொற்றொடரியல் அடிப்படையில் சரியானதாகும். ஆனால், சொற்பொருளியல் அடிப்படையில் இது பிழையானதும், பொருளற்றதும் ஆகும். சொற்றொடரியல், மொழியின் வடிவங்கள் உலகப் பொருட்களுடன் கொண்டுள்ள தொடர்புகள் பற்றியே கவனம் செலுத்துகின்றது.