வாஷிங்டன் : முழு உடல் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உடல் நிலை மிக நன்றாக இருந்தாலும், சிகரெட் புகைக்கும் பழக்கத்தைக் கைவிட முடியாமல் தவிக்கிறார். நாட்டின் உச்ச பதவியில் உள்ளவர்கள், ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் பழக்கம், வெளிநாடுகளில் உண்டு. குறிப்பாக அமெரிக்காவில், தேர்தலில் போட்டியிடச் செல்லும்போதே, இத்தகைய பரிசோதனைக்கு வேட்பாளர்கள் உள்ளாக வேண்டும்.
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக, முழு உடல் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளார் அதிபர் ஒபாமா. அமெரிக்கா மேரிலேண்டில், பெதெஸ்டா பகுதியில் உள்ள தேசிய கடற்படை மருத்துவமனையில், இவருக்கு பரிசோதனை நடந்தது.
அவரைப் பரிசோதித்த, வெள்ளை மாளிகை முதன்மை மருத்துவர் டாக்டர் ஜெப்ரி குல்மேன் அடங்கிய குழு கூறியதாவது: அதிபர் பணியில் ஈடுபடும் வகையில், முழு உடல் தகுதி பெற்றிருக்கிறார் ஒபாமா. அவருடைய பதவிக் காலம் முழுவதும் நல்ல முறையில் பணியாற்ற ஏற்ற உடலைப் பெற்றிருக்கிறார். எனினும், சிகரெட் புகைக்கும் பழக்கத்திலிருந்து விடுபட மிகவும் சிரமப்படுகிறார். அதற்கான பயிற்சியை அவர் மேற்கொள்வது நல்லது.
உடலில் கெட்ட கொழுப்பு, தேவையான அளவை விட சற்று அதிகமாக உள்ளது. 81.5 கிலோ எடையுள்ள அவர், உடற்பயிற்சி, மித ஓட்டப் பயிற்சி, பளு தூக்குதல், கூடைப் பந்து - கோல்ப் விளையாட்டுகள் ஆகியவற்றை தினமும் மேற்கொள்கிறார். இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவை சீராக உள்ளன. ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்படும் முட்டி வலி, இவருக்கும் உண்டு. உடற்பயிற்சி முறையில், சிறு மாறுதல் செய்து, முட்டியை பலப்படுத்தினால், வலி நீங்கி விடும். இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.
ஒபாமாவின் சிகரெட் பழக்கம் குறித்து, கடந்த ஜூன் மாதம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ""இப்பழக்கத்தை 95 சதவீதம் கைவிட்டு விட்டேன். எனினும், சில நேரங்களில் மிகவும் குழம்பி விடுகிறேன்,'' என்று கூறினார். தற்போது ஒபாமா, "நிக்கோட்டின் ரீபிளேஸ்மென்ட்' சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். அடுத்த 2011, ஆகஸ்டில் ஒபாமாவுக்கு 50 வயது பூர்த்தி அடையும். அப்போது மீண்டும் பரிசோதனை செய்யலாம் என டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஒபாமாவின் தாய் கருப்பை வாய் புற்றுநோய் காரணமாகவும், தாத்தா, புராஸ்டேட் புற்றுநோய் காரணமாகவும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.