பிராட்மேனோடு ஒப்பிடாதீர்கள்: சச்சின்
by Rameshraj[ Edit ] 2010-03-03 10:52:26
மும்பை :""கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனுடன் என்னை ஒப்பிட வேண்டாம்,'' என, சச்சின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், சர்வதேச அளவில் முதன் முறையாக 200 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இதையடுத்து இவரை, இங்கிலாந்தின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் உள்ளிட்ட பலர், ஆஸ்திரேலிய பேட்டிங் ஜாம்பவான் பிராட்மேனுடன் ஒப்பிட்டு பேசினர். தவிர, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், அஜித் வடேகர் உள்ளிட்டோர், சச்சினுக்கு "பாரத் ரத்னா' விருது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதில் அளித்து சச்சின் கூறியது:இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாட அணியில் வாய்ப்பு கிடைத்ததே மகிழ்ச்சியாக உள்ளது.குறிப்பாக அணியின் வெற்றியில் பங்கேற்கும் போது கூடுதலாக மகிழ்ச்சி ஏற்படுகிறது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடத் துவங்கிய போது, முதலில் சாதிப்பேன் என்றே நினைக்க வில்லை. தற்போது இந்த சாதனை (200 ரன்) இந்தியரிடம் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்து, உலக கோப்பை தொடருக்காக காத்திருக்கிறேன். மற்றபடி என்னை மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு பேசுவதை ஒருபோதும் நம்புவதில்லை. ஆஸ்திரேலியாவின் பிராட்மேனுக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் மரியாதை தருபவன் நான்.
விருது மகிழ்ச்சி: எனக்கு"பாரத் ரத்னா' விருது வழங்கவேண்டும் என்கிறார்கள்.இந்த விருது கிடைப்பது மிகப்பெரிய கவுரவம். இதைப் பெறுபவர் யாராக இருந்தாலும் அவர் தான், இந்த தேசத்தின் ஒட்டுமொத்த "ஹீரோ' தான்.அப்படி இருக்கையில் இந்த பட்டியலில் சேர, யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் அது நடக்கும் போது நடக்கட்டும். இப்போதைக்கு எனது கவனம் முழுவதும், தொடர்ந்து கிரிக்கெட் மேல்தான் உள்ளது.
ஹாக்கி ரசிகன்: எனக்கு ஹாக்கியில் சிறந்த அனுபவம் கிடையாது. ஆனால் உண்மையில் இந்திய தேசிய ஹாக்கி அணியின் தீவிர ரசிகன் நான். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில்,இந்திய வீரர்கள் அசத்தலாக விளையாடினர்.போட்டி முடியும் நேரத்தில் அதிக "டென்ஷன்' இருந்தது. கடைசியில் நமதுஅணி வென்றது. இதற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.