சந்திரனில் பனிமலைகள் ஏராளம் : 'நாசா' விஞ்ஞானிகள் புது ஆய்வு
by Rameshraj[ Edit ] 2010-03-03 10:59:45
வாஷிங்டன் :நிலவில் பனி உறைந்த நிலையில் உள்ள 40க்கும் மேற்பட்ட மலைபோன்ற படிவங்கள் பிரம்மாண்டமாக உள்ளதை, சந்திரயான் விண்கலத்துடன் அனுப்பப்பட்ட அமெரிக்காவின் "மினி-சார்' ரேடார் கண்டறிந்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தினால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-1 விண்கலம் கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம், நிலவுக்கு அனுப்பப்பட்டது. நல்ல முறையில் செயல்பட்ட இந்த ஆளில்லாத விண்கலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென செயலிழந்தது. இருப்பினும் இந்த விண்கலம் நிலவில் தண்ணீர் உள்ளதை கண்டு பிடித்தது.சந்திரயான் விண்கலத்துடன் அனுப்பப்பட்ட அமெரிக்காவின் "மினி சார்' ரேடார் சாதனம் சந்திரனின் வட துருவ பகுதிகளை படம் பிடித்து அனுப்பியுள்ளது. ரேடியோ அலைகள் பிரதிபலிப்பை கொண்டு பல பரிமாணங்களில் எடுக்கப்பட்ட படங்களை அமெரிக்காவின் "நாசா'விஞ்ஞானி பால் ஸ்புடீஸ் ஆய்வு மேற்கொண்டார். மினி-சார் எடுத்து அனுப்பிய படங்களை ஆய்வு செய்த போது, 40 மலைகள் பனி மூடிய நிலையில் இருந்தது தெரிந்தது. சந்திரனின் புறப்பரப்பில் வான் பொருட்கள் ஏற்படுத்திய பள்ளங்கள் மைல் கணக்கில் உள்ளன.
அம்மாதிரி உள்ள பல பகுதிகள் 2 கி.மீ முதல் 15 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டவை. "கிரேட்டர் ' என்றழைக்கப்படும் இவை மீது சூரிய வெளிச்சம் விழுவதில்லை. பூமியில் இருந்து பார்க்கும் போதும் இந்தப் பகுதி தெரிவதில்லை. ஆனால், இதன் மீது பனிப்படலம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சந்திரனில் எப்படி பனி உருவாகிறது என்பது போன்ற விவரங்கள் இந்த படங்களின் மூலம் அறிய முடியும் என்று பால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தண்ணீர்த்துளிகள் பற்றி சந்திரயான் -1 கண்டறிந்ததின் தொடர்ச்சியாக பனிப்படலங்கள் கண்டறியப்பட்டிருப்பது பெரிய அளவிலான விஞ்ஞான வெற்றியாகும்.