அம்மா சொன்னதை கேட்ட மதன் திடுக்கிட்டான்.
அம்மா நீ சொல்றது நிஜமா?
பின்ன நான் பொய்யா சொல்றேன். உன் பொண்டாட்டி
அவங்க ஆளுங்க வந்தா பழம், பலகாரம், ஹார்லிக்ஸ்
கொடுத்து நல்லா உபசரிக்கிறா. நம்ம ஆளுங்க வந்தா
கண்டுக்கிறதே இல்லை. அதிகபட்சம் ஒரு டம்ளர் டீ
கொடுக்கிறா. இது எப்படிடா நியாயம்? – சாவித்திரியின்
குரலில் கோபம் கொப்பளித்தது.
அம்மா… நீ கொஞ்சம் பொறுமையா இரு. அப்புறம்
நித்யாவை நானே கேக்கிறேன்.
”அதுக்கு அவசியமே இல்லீங்க. இப்பவே கேளுங்க.
நான் பதில் சொல்றேன்” ஸ்டோர் ரூமிலிருந்து நித்யா
சடாரென வெளியே வந்தாள். ”எனக்கு உங்க ஆளுங்க
என் ஆளுங்கன்ற பாகுபாடு எல்லாம் கிடையாது.
என்னுடைய டிக்ஷ்னரில இரண்டே இரண்டு வகை தான்
இருக்குது. ஒண்ணு யூஸ்புல். இன்னொன்று யூஸ்லெஸ்.
என் மாமா ரேஷன் கடையில வேலை செய்யறார். நமக்கு
கோதுமை, சர்க்கரை, மைதா எல்லாம் மார்க்கெட் ரேட்டை
விட குறைவா கொடுக்கிறார்.
என் தம்பி மிலிடெரில இருக்கான். அவனால நிறைய
பொருளுங்க குறைவான விலைலயே நமக்கு கிடைக்குது.
நமக்கு உபயோகமாக இருக்கிறவங்களை ரொம்ப
அருமையா உபசரிக்கிறேன். மத்தவங்களை சாதாரணமா
அதே சமயம் நாகரிகமா உபசரிக்கிறேன். உங்க சொந்தத்துல
இந்த மாதிரி யாராவது நமக்கு யூஸ்புல்லா இருந்து நான்
கவனிக்காம விட்டுட்டு இருந்தா சொல்லுங்க பார்க்கலாம்”
என்றாள்.
மருமகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்
சாவித்திரியின் தலை கவிழ்ந்தது.