வெள்ளிவிழா காணும் டாட்காம் டொமைன்!
by Geethalakshmi[ Edit ] 2010-03-16 11:47:23
வெள்ளிவிழா காணும் டாட்காம் டொமைன்!
சான் ஃபிரான்சிஸ்கோ: டாட் காம் டொமைனின் 25வது ஆண்டு தினம் உலகம் முழுவதும் நினைவுகூறப்பட்டு வருகிறது.
தற்போது 30 வயதுக்கு உட்பட்டவர்கள், தங்கள் வாழ்க்கையில் இண்டர்நெட் என்ற அம்சம் எப்போது நுழைந்தது என்பதை நிச்சயம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
விளையாட்டு, பொழுபோக்கு, படிப்பு, அலுவலக வேலை, பண பரிமாற்றம் என வாழ்க்கையின் அத்தனை தளங்களிலும் இன்றைய தலைமுறையினருக்கு இண்டர்நெட் அத்தியாவசியமான வசதியாக உள்ளது.
இப்படி சமூக மற்றும் தனிமனித வாழ்க்கை முறையில் ஐக்கியமாகிவிட்ட இன்டர்நெட்டில், முதல் டாட் காம் முகவரி, பதிவு செய்யப்பட்டு நேற்றுடன் சரியாக 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
கடந்த 1985ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி மசாசூஷ்ட்ஸின் கேம்பிரிட்ஜை சேர்ந்த சிம்பாளிக்ஸ் கம்ப்யூட்டர் நிறுவனம், உலகிலேயே முதல் முறையாக டொமெயினில் தனது டாட் காம் முகவரியை பதிவு செய்தது.
அந்த ஆண்டில் டாட் காம் முகவரிக்கு உலகம் முழுவதும் வெறும் ஐந்து நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்திருந்தன. இதன் பிறகு 1997ம் ஆண்டில் டாட் காம் முகவரிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டுவிட்டது.
தற்போதைய நிலவரப்படி டாட் காம் இணையத் தளங்களின் எண்ணிக்கை சுமார் எட்டு கோடி அளவுக்கு பல்கி பெருகி விட்டன.
இதில் இ-காமர்ஸ் எனப்படும் மின்னணு வர்த்தகத்துக்கான இணையத் தளங்களின் எண்ணிக்கை மட்டும் 1.19 கோடியை தாண்டும்.
பொழுதுபோக்கு இணையத் தளங்கள் சுமார் 43 லட்சமும், விளையாட்டுக்கான இணையத் தளங்கள் சுமார் 18 லட்சமும் உள்ளன.
ஒட்டுமொத்தமாக இந்த இணையத் தளங்களின் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 40,000 கோடி அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டப்படுவதாக வெரிசைன் அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் வரும் 2020ம் ஆண்டுவாக்கில் இந்த வருவாய் 95 ஆயிரம் கோடி டாலர் அளவை தாண்டும் என கணிக்கப்படுகிறது.