தமிழ் புத்தாண்டா? சித்திரை திருநாளா?

by Geethalakshmi 2010-04-18 10:49:31

தமிழ் புத்தாண்டா? சித்திரை திருநாளா?
ஏப்ரல் 14-ம் தேதி கோலாகலமாகத் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது கேப்டன் தொலைக்காட்சி. அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்களின் வாழ்த்துகளைத் திரையில் பார்த்து, விஜயகாந்தோடு நேயர்களும் திருப்தியடைய வேண்டியதாயிற்று.

அனைவரையும் நேரில் அழைத்து நேரு அரங்கத்தில் ஒரு பிரமாண்ட விழா நடத்தி தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியிருந்தால் தமிழகம் அதிர்ந்திருக்காதோ? இவ்வளவு அடக்கி வாசிக்க என்ன காரணம்? ஆரம்பம் அடக்கமாக இருக்கிறது, போகப்போக எப்படியோ?

தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் என்று கூறிச் சிறப்பு நிகழ்ச்சிகளை அறிவிக்க முடியவில்லை, அதேசமயம் விழாக்கால வியாபாரத்தை விட்டுவிடவும் மனமில்லை. இதனால், என்ன செய்வது என்று சிந்தித்த கலைஞர் தொலைக்காட்சியினரின் உள்ளத்தில் உதித்தது, சித்திரைத் திருநாள் கொண்டாட்டம். புத்தாண்டு கொண்டாடினால்தானே விமர்சனம் எழும்? மாதப் பிறப்பைக் கொண்டாடினால்...? எனவே ஒரு வாரம் முன்பிருந்தே தனது சிறப்பு நிகழ்ச்சிகளை, சித்திரைத் திருநாள் கொண்டாட்டம் என்கிற போர்வையில் நேயர்களிடம் விற்கத் தொடங்கியிருந்தது கலைஞர் தொலைக்காட்சி. இனி வைகாசித் திருநாள், ஆனித் திருநாள் என மாதந்தோறும் கலைஞர் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளை நேயர்கள் எதிர்பார்க்கலாம்...

இந்த வம்பே வேண்டாமென்று, அதே நாளில் 18 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்ததைக் கொண்டாடியது சன் தொலைக்காட்சி. அதிலும் கொஞ்சம் சறுக்கிவிட்டார்கள். போட்டதோ தமிழ் மாத பலன்கள் என்கிற தலைப்பில் கார்டு, சொன்னதோ தமிழ் வருட பலன்கள். தொகுப்பாளரும், நிகழ்ச்சி முழுவதும் "தமிழ் வருட பலன்கள்' என்றே சொன்னார். முழுவதும் நனைந்த பிறகு முக்காடு எதற்கு? சொல்வதை தைரியமாகச் சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதானே, ஜெயா தொலைக்காட்சியைப் போல...? எதற்கு இந்தப் பதுங்கலும், நழுவலும்?

தமிழர் திருநாள் என்றாலே பட்டிமன்றங்கள் களை கட்டுவது வழக்கம்தானே! பட்டிமன்றம் என்றாலே நமது நினைவுக்கு முதலில் வருவது சாலமன் பாப்பையாதானே!! சித்திரை முதல் நாளன்று, சன் தொலைக்காட்சியில், கலகலப்பைப் பற்றிய சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தில், கலகலப்புக்குக் குறைவில்லை. ரசிக்காதவர்கள் அன்றைய தினத்தையே வீணடித்துவிட்டார்கள் என்று கூறலாம். நடுவரும் சரி, பங்கேற்பாளர்களும் சரி, தங்களது பேச்சாற்றலால், நேயர்களை ஒரு வினாடி கூட அங்கிங்கு அசையாதபடி கட்டிப்போட்டு விட்டார்கள். நேரம் போனதே தெரியவில்லை... மற்ற சானல்களிலும் பட்டிமன்றங்கள் - நடந்தன!

அன்றிரவு சானல்களிடையே நீந்தும்போது கண்களில் சிக்கியது, ஜெயா பிளஸ் தொலைக்காட்சியின், "தமிழா, தமிழா' என்கிற நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் உரையாடிக் கொண்டிருந்தவர்கள் பழ.கருப்பையாவும் நாஞ்சில் சம்பத்தும். தமிழின் இன்றைய நிலை குறித்துத் தங்களது கருத்துகளை அவர்கள் பகிர்ந்துகொண்டபோது சோகம், கோபம், ஏக்கம், பெருமிதம் எனப் பல்வேறு உணர்ச்சிகள் ஒருசேரத் தோன்றியது அவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும்தான். மதமாச்சரியங்களை மறந்து தமிழை வழிபடும் தமிழனின் சிறப்பைச் சொன்ன அதே வேளையில், பிறமொழிக் கலப்பால் தாய்மொழியைக் கொல்வது குறித்த வேதனையையும் வெளிப்படுத்தினர்.

தமிழைப் படிப்பதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது, பிறமொழிகளையும் பயின்று அம்மொழிகளிலுள்ள சிறந்த கூறுகளைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்று வலியுறுத்திய பழ.கருப்பையா, தமது வீட்டிலேயே தமிழைப் புகுத்துவதில் தம்மால் முழுவெற்றி பெற முடியவில்லை என்கிற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தத் தவறவில்லை. ஒப்பிலக்கியம் வளரவில்லையே என்கிற ஏக்கம் நாஞ்சில் சம்பத்துக்கு... தமிழ்ப்பற்றுடைய இருவர் பேசுவதைக் கேட்பதைக் காட்டிலும் இனிமை வேறேதும் உண்டோ, தொலைக்காட்சியில்...?

ஞாயிறு காலை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் இந்த வார இயக்குனர்கள் நமக்குத் திகிலூட்டினார்கள் - படங்களின் மூலமல்ல, சிந்தனைகளின் மூலம். ஒரு கொலையை எப்படியெல்லாம் செய்யலாம் (செய்திருக்கலாம்...) என்பதை விலாவாரியாக (விஷுவலாக) விளக்கினார் ஓர் இயக்குநர். மற்றொருவரோ ஒரு டீக்கடைச் சிறுவனைக் கொலைகாரனாக்கி அவனைத் தன் ஹீரோவாகவும் காட்டினார். ரவுடிகளைப் போல நம்மாலும் கொலைசெய்ய முடியும் என்று அதுபோன்ற சிறுவர்கள் நம்பத் தொடங்கி, படத்தில் காட்டப்பட்டது போன்ற முயற்சிகளிலும் இறங்கினால் என்ன ஆகும்?

இளம் இயக்குநர்களே, நீங்கள் தேர்ந்தெடுக்கும் கதையின் கருத்தையும், சமுதாயத்தின் மீதான அதன் பாதிப்பையும் ஆய்ந்தறிந்த பின்னர் படத்தை உருவாக்குங்கள். இல்லையெனில், நீங்கள் உருவாக்குவது, நிழல் வடிவில் தோன்றி, சமுதாயத்தில் பெரும் அழிவை ஏற்படுத்தும் அணுகுண்டாகக் கூட இருக்கலாம். கவனம் தேவை, நண்பர்களே!

மேற்கூறிய கருத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது வசந்த் தொலைக்காட்சியின் "க்ரைம் டைம்' நிகழ்ச்சியில் ஒளிபரப்பான (மனந்திருந்திய) முன்னாள் கூலிப்படையினரின் பேட்டிகள். ரஜினியின் தளபதி படத்தைப் பார்த்துவிட்டு, அவரைப் போலவே அரிவாளைத் தூக்கிக்கொண்டு, ஓட ஓட விரட்டிச் சென்று ஆட்களை வெட்டவும், காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு ஸ்டைலாக தெருவில் நடந்து செல்லவும் விரும்பி, கூலிப்படையில் சேர்ந்ததாக அவர்களில் ஒருவர் கூறியதைப் பார்த்தவர்களுக்கு, திரைப்படங்களின் தாக்கம் எத்தகையது என்பது புரிந்திருக்கும். நமக்குப் புரிந்து என்ன பயன்? திரைத்துறையின் சமூகப் பார்வை நாளுக்கு நாள் வேறு திசையில் பயணித்துக்கொண்டிருக்கிறதே...!
1748
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments