கடல் ஆமை
by Geethalakshmi[ Edit ] 2010-04-18 11:03:49
கடல் ஆமை
உலகம் முழுவதும் கடல் ஆமைகள் 225 வகைகள் காணப்பட்டாலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் காணப்படுகின்றன.
இதன் மேலோடு கடுமையான பலம் பொருந்தியதாகவும் இதன் உட்பகுதி மிகவும் பாதுகாப்பாகவும் அமைந்துள்ளது. விலா எலும்புகளும் முதுகு எலும்புகளும் ஒன்றாகி உடல் தசைகள் சுருங்கி காணப்படுகின்றன. இவற்றின் நுரையீரல் மேலோட்டினை ஒட்டியவாறு அமைந்திருக்கிறது.
பற்களுக்குப் பதிலாக கொம்புகளால் ஆன அசையாத அலகு போன்ற அமைப்பு இரு தாடைகளிலும் இருக்கிறது. இதன் கை, கால்கள் நீர் மற்றும் நிலத்தில் வாழ ஏற்றதாகவும் உள்ளது. முன்கால்கள் துடுப்புகளைப் போன்று இருப்பதால் மிகவேகமாக கடலில் நீந்திச் செல்கின்றது.
பின்னங்கால்களில் உள்ள விரல்கள் சவ்வு போன்ற அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. கண்கள் சிறியதாக இருப்பினும் அனைத்து வண்ணங்களையும் காணமுடியும்.
கடல் ஆமைகளின் வாயிலும் கழிவுகளை வெளியேற்றும் பகுதியிலும் சிறப்பு ரத்த நாளங்கள் உள்ளன. இவை நீரில் மூழ்கி இருக்கும் போது பிராணவாயுவை நீரிலிருந்து பிரித்தெடுத்து சுவாசிக்க உதவுகிறது. ஆண் ஆமையின் வயிற்றுப்பகுதி குழியாகவும் பெண்ணின் வயிற்றுப்பகுதி பெருத்தும் குவிந்தும் காணப்படும்.
ஆழ்கடலில் இனப்பெருக்கம் செய்யும் இவை மணற்பாங்கான கடற்கரையில்தான் முட்டையிடுகின்றன. கடற்கரையில் 50 முதல் 80 செ.மீ வரையிலான குழி தோண்டி அதில் 100 முதல் 150 முட்டைகள் வரை இட்டு அக்குழியை மூடி விடுகின்றன. முட்டை குஞ்சுகளாக மாற சூரிய வெப்பம் அவசியம் என்பதால் முட்டையிட மட்டுமே அவை கடற்கரைக்கு வருகின்றன.
60 முதல் 90 நாட்களில் முட்டைகள் குஞ்சுகளாகி கடலை நோக்கி ஊர்ந்து சென்று பின்னர் நீரில் நீந்தி ஆழ்கடலை அடைகின்றன. 1000 ஆமைகளில் ஒன்றுதான் பல்வேறு தடைகளைத் தாண்டி முதிர்ந்த பருவத்தை அடைகிறதாம்.
சில ஆமைகள் கடற்பாசிகளையும் கடற்பஞ்சுகளையும் உண்கின்றன. பெருந்தலை ஆமைகள் நண்டுகள் மற்றும் மெல்லுடலிகளையும் சில வகை ஆமைகள் கடலின் ஆழத்தில் டைவ் அடித்து ஜெல்லி மீன்களையும் சாப்பிடுகின்றன. இதன் மாமிசமும்,முட்டைகளும் உணவாகவும் பயன்படுகின்றன.
இந்த ஆமைகளில் இருந்து பெறப்படும் முட்டைகளில் இருந்து மருந்துப் பொருட்கள்,வாசனைத் திரவியங்கள், சோப்பு போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன.
இவற்றின் ரத்தம் மூலநோய்க்கு சிறந்த மருந்தாகிறது. ஆமைகளின் ஓடுகளில் இருந்து அலங்காரப் பொருட்களும் காலணிகளும் கூட தயாரிக்கப்படுகின்றன.
மீனவர்கள் விசைப்படகுகளின் மூலம் மீன் பிடிக்கும்போது மீன்பிடி வலைகளில் டெட் எனப்படும் ஆமை தவிர்ப்புக் கருவியைப் பொருத்திக் கொண்டால் வலைகளில் ஆமைகள் மாட்டி இறப்பதைத் தவிர்க்க முடியும். இந்த அரியவகை கடல்வாழ் உயிரினம் அழிந்து கொண்டே வருவதால் இவற்றைப் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.