நட்சத்திர மீன்
by Geethalakshmi[ Edit ] 2010-04-18 11:05:11
நட்சத்திர மீன்
உலகம் முழுவதும் 1800 வகைகள் உள்ளன. பெரும்பாலும் 5 கால்கள் இருக்கும். ஒரு சிலவற்றிற்கு 5 கால்களை விட கூடுதலாகவும் இருக்கும். ஒரு கால் உடைந்தாலும் மீண்டும் வளர்ந்து விடும்.
ஒரு மீட்டர் முதல் 6000 மீட்டர் வரை கடலில் உள்ள ஆழத்தில் இருக்கும். இவை இரு ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை உயிர் வாழும் தன்மையுடையன. இது குறித்து மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையின் திட்ட அலுவலர் அ.முருகன் கூறியது:
இந்த நட்சத்திர மீனின் கால்களில் உள்ள டியூப்பிட் என்ற ஒன்றின் மூலம் மெதுவாக நகர்ந்து செல்லும். இந்த டியூப்பிட்டைத் தொட்டால் உடனே அதன் கால் சுருங்கி விடும்.
5 கால்களும் சேரும் உடலின் மையப்பகுதியின் அடியில் உள்ள துவாரத்தில் மேட்டரி போரேட் என்பதன் வழியாக கடல்நீர் உள்ளே சென்று ஸ்டோன் கெனால் என்ற உடல் உறுப்பின் வழியாக அத்தண்ணீர் வடிகட்டப்பட்டு வெளியேறும் வசதி உள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால் இவை ஹைடிராலிக் இயந்திரம் போல செயல்படுகின்றன.
கால்களின் நுனிப்பகுதியில் ஒரு சிறிய கண் இருக்கும். இதற்கு ஆசிலெஸ் என்று பெயர். இக்கண்கள் மூலமாக வெளிச்சத்தையும் இருளையும் மட்டுமே உணர முடிகிறது. கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் ஒட்டியுள்ள சங்குகள்,சிப்பிகள் போன்றவற்றைச் சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன.
இந்த நட்சத்திர மீன்களில் இருந்து தான் டாக்ஸின் என்ற வேதிப்பொருள் எடுப்பதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. உயிரோடு இருப்பவைகள் அலங்கார மீன்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. மீனவர்கள் பயன்படுத்தும் சிங்கி வலை,நண்டு வலைகளில் இவை மாட்டிக் கொள்கின்றன.
ஆனால் இவற்றை மீனவர்கள் வலையில் இருந்து வெளியில் எடுத்து உயிரோடு காயப்போட்டு விடுவதாலும் இந்த இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போய்க் கொண்டே இருக்கிறது.