வஞ்சப்புகழ்ச்சியணி

by Geethalakshmi 2010-04-29 21:57:00

வஞ்சப்புகழ்ச்சியணி


வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்.

எ.கா

* புகழ்வது போல் இகழ்தல்

தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான் திருக்குறள் - திருவள்ளுவர்

விளக்கம்:

"கயவர்கள் தம்மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றிச் செய்து முடிப்பதால் தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்" என்பது இக்குறட்பாவின் பொருள்.

கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும். (புகழ்வது போல் இகழ்தல்)

* இகழ்வது போல் புகழ்தல்

பாரி பாரி என்றுபல ஏத்தி, ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர் பாரி ஒருவனும் அல்லன்; மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே புறநானூறு பாடியவர்: கபிலர்

விளக்கம்:

"புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைம்மாறு கருதாமல் கொடுக்கின்றான்? மாரியும்தான் கைம்மாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகம் புரக்கின்றது" என்பது இப்பாடலின் பொருள்.

இது பாரியை இகழ்வது போலத் தோன்றினும், பாரிக்கு நிகராகக் கொடுப்பாரில்லை என்று புகழ்ந்ததே ஆகும்.(இகழ்வது போல் புகழ்தல்)
1935
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments