ஹனி மன்த் = ஹனிமூன்
by Geethalakshmi[ Edit ] 2010-04-30 21:49:44
ஹனி மன்த் = ஹனிமூன்
மாக்வீஸல் தீவில் வசிக்கும் ஒரு பிரிவினரிடையே திருமணத்திற்கு வந்திருக்கும் ஆண் விருந்தினர்களை வரிசையாகப் படுக்க வைத்து அவர்களின் முதுகின் மீது அடியெடுத்து வைத்து நடந்து மணமகன் மணமேடைக்குச் செல்வான். பின்னர் இதர சடங்குகள் துவங்குமாம்.
ஐரோப்பாவிலுள்ள கொலூஸா என்னும் பூர்வ குடிகளிடையே மணப்பெண் மணமகனைச் சொறிவது ஒரு முக்கியச் சடங்கு. இதை மணவாழ்வைத் தொடங்க நல்ல யோகமாக அவர்கள் கருதுகிறார்களாம்.
ஜெர்மனியில் வெஸ்ட்பேலியா எனுமிடத்தில் மணத்தம்பதிகளின் வீட்டு வாசலில் வாலிபர்கள் கூடி தகர டப்பாக்களைத் தட்டி சத்தமேற்படுத்துவார்களாம். இதை பேய் பிசாசுகளை ஓட்டுவதற்காக செய்கிறார்களாம். இதுபோல் ஜெர்மனி முழுவதும் திருமண நாளுக்கு முதல் நாள் மணப்பெண் வீட்டு வாசலில் மண்பானைகளைப் போட்டு உடைக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப் படுகிறதாம்.
அமெரிக்காவில் திருமண விருந்துக்கு வந்தவர்கள் மணமக்கள் வெளியே செல்லும் போது கோதுமையை அவர்கள் மீது போடுகிறார்களாம்.
இந்தியாவில் பஞ்சாப்பில் ஒரு வகுப்பினரிடையே மணமகள் வீட்டுக்கு மணமகன் செல்லும் போது வாசலில் ஒரு சல்லடையைக் கட்டித் தொங்க விடுகிறார்கள். சல்லடையில் துளைகள் இருக்கும் அளவிற்குப் பெண்ணிடம் குறைகள் பல இருந்தாலும் அதை நல்ல குணத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். குறைகளை எல்லாம் தள்ளிப் பெண்ணை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக மணமகன் ஒரு இரும்பு ஆயுதத்தால் அந்த சல்லடையைக் கிழித்து அதன் பின்புதான் மணமகள் வீட்டிற்குள் செல்ல வேண்டுமாம்.
இந்தியாவின் இமயமலைச் சாரலில் உள்ள கொடுவா எனும் கிராமத்திலுள்ள மக்களின் சகோதரர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்கள் பஞ்ச பாண்டவர்களை தங்கள் தெய்வமாகக் கருதி வழிபடுகிறார்களாம்.
இந்தியாவில் காஷ்மீரில் மணப்பெண் திருமணச் சடங்குகளில் கலந்து கொள்வதில்லை. தனக்குப் பிரதிநிதியாக ஒரு ஒட்டகத்தை அனுப்பி வைக்கும் வழக்கம் அவர்களிடமிருக்கிறது.
எத்தியோப்பியாவிலுள்ள கல்லாஸ் எனும் குடிமக்களிடையே திருமணத்தின் போது மணமகன் மணமகளைத் தூக்கி ஒரு பெரிய நீர்த்தொட்டியில் மூழ்கி எழ வேண்டும். அப்போது எவ்வளவுக்கெவ்வளவு சப்தம் எழுகிறதோ அவ்வளவுக்குத் திருமணம் சிறப்பானதாகக் கருதப்படும்.
ஜெர்மனியில் ஒரு சிலரிடையே வினோதமான சுயம்வரம் முறை உள்ளது. இதன்படி திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஜோடிகள் இருவருக்குமிடையே ஒரு மரக்கட்டை வைக்கப்படும். இரட்டைக் கைப்பிடியுள்ள ரம்பம் ஒன்றைக் கொடுத்தி அந்த மரக்கட்டையை இரண்டாக அறுக்கச் சொல்வார்கள். இருவரும் ஒரே வேகத்தில் இழுத்தால்தான் அறுப்பது சுலபமாக இருக்கும். ரம்பம் உடையாமல் மரக்கட்டையை வெற்றிகரமாக அறுத்து முடிக்கும் ஜோடிகளுக்கு நல்லப் பொருத்தம் இருப்பதாக கருதி திருமணம் செய்து வைக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப் படுகிறது.
பின்லாந்து நாட்டில் திருமணத்திற்கு வருபவர்கள் பரிசு கொடுக்காமல் வந்துவிட முடியாது. வந்தவர்களின் கழுத்தைக் கட்டிக்கொண்டு மணப்பெண் அழத் தொடங்கி விடுவாள். வந்தவர்கள் அழுகை பொறுக்காமல் பரிசுகளை அளிப்பார்களாம்.
டியூட்டன் எனும் இன மக்கள் திருமணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒரு மாதம் வரை ஒரே கிண்ணத்தில் தேன் அருந்த வேண்டும் என்பது ஒரு சடங்கு. ஆங்கிலேயர்கள் அந்த நிகழ்ச்சியை "ஹனி மன்த்" என்று அழைத்தனர். இது பின்னால் ஹனிமூன் ஆகிவிட்டது.