வெற்றிலைச் செய்திகள்

by Geethalakshmi 2010-04-30 21:56:59

வெற்றிலைச் செய்திகள்


நம் தமிழர்களிடையே எந்த முக்கியமான வைபவமாக இருந்தாலும் வெற்றிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த வெற்றிலை தமிழ்நாட்டில் கும்பகோணம் பகுதியிலும், தேனி மாவட்டத்தில் பெரியகுளம், சின்னமனூர் பகுதியிலும் அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. இருப்பினும் வெற்றிலை என்றால் கும்பகோணம் தான் என்கிற அளவிற்கு கும்பகோணம் வெற்றிலை பிரசித்தம். வெற்றிலைப் பயிருக்கு பயிர் செய்ய விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டிப் பதியம் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். வெற்றிலையை பயிர் செய்யும் நிலப்பகுதியை கொடிக்கால் என்று அழைக்கின்றனர். (தேனி மாவட்டத்தில் வெற்றிலையை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிர் செய்கிறார்கள். இவர்கள் கொடிக்கால் பிள்ளைமார் என்று அழைக்கப்படுகிறார்கள்.) வெற்றிலையில் கருகருவென்று கரும்பச்சை நிறத்திலிருப்பது ஆண் வெற்றிலை என்றும் இளம்பச்சை நிறத்திலிருப்பது பெண் வெற்றிலை என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். இந்த வெற்றிலைக்கு பல மருத்துவ குணங்கள் இருப்பதால் சித்த மருத்துவத்தில் இது பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் மட்டுமில்லை வெற்றிலை சில சம்பிரதாயங்களுக்காகவும் பிற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனர்கள் வெற்றிலையை இடது கையால் வாங்க மாட்டார்கள். நம் நாட்டிலும் இப் பழக்கம் இருந்து வருகிறது.


சுமித்ராவில் மனைவியை விட்டுப் பிரிய விரும்பும் கணவன் வெற்றிலையை அவளிடம் கொடுத்துத் "தலாக்" என்று மூன்று தடவை கூறி விட்டால் விவாகரத்து ஆகிவிட்டதாக அர்த்தம்.


தூக்கிலிடுவதற்கு முன்பு குற்றவாளிகளுக்கு வெற்றிலை பாக்கு கொடுக்கும் வழக்கம் மியான்மரில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.


சிறையில் அடைபட்டுக் கிடக்கும் கைதிகளுக்கு மலேரியா போன்ற நச்சுக் காய்ச்சல் வராமல் இருக்க அவர்களுக்கு வெற்றிலை கொடுப்பது நெதர்லாந்து நாட்டின் வழக்கம்.

சண்டை போட்டுக் கொள்பவர்கள் சமாதானம் அடைய வெற்றிலை மாற்றிக் கொள்வது மலேசியா வழக்கம்.
1840
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments