பிள்ளையார் நோன்பு
by Geethalakshmi[ Edit ] 2010-04-30 22:07:45
பிள்ளையார் நோன்பு
எதையும் எழுதத் துவங்குவதற்கு முன்பு பிள்ளையார் சுழி போட்டு எழுதுவது தமிழர்களின் வழக்கம். எந்த ஒரு செயலைச் செய்யத் துவங்கினாலும் முதலில் பிள்ளையாரை வணங்கி பின்பு மற்ற கடவுள்களை வணங்குவதும் தமிழர்களிடையே வழக்கமாக இருக்கிறது. இதுபோல் விநாயகர் சதுர்த்தியன்று இந்தியா முழுவதும் விநாயகருக்கான சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வரும் வழக்கமும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த விநாயகருக்கு "பிள்ளையார் நோன்பு" எனும் பெயரில் நகரத்தார் என்று அழைக்கப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினர் ஒரு சிறப்பு வழிபாட்டை செய்து வருகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம். இந்த நகரத்தார் சமுதாயத்தினர் தங்கள் இல்லங்களில் வருடத்திற்கு ஒருமுறை "பிள்ளையார் நோன்பு" எனும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை அல்லது மார்கழி மாதத்தில் சஷ்டி திதியும் சதய நட்சத்திரமும் சேர்ந்து வரும் நன்னாளில் இந்த சமுதாயத்தினர் "பிள்ளையார் நோன்பு" கொண்டாடுகின்றனர். 21 நாட்கள் விரதமிருக்கும் நகரத்தார் குடும்பத்தினர் விநாயகரை வணங்கி ஒவ்வொரு நாளும் ஒரு நூலாக எடுத்து 21 நூலை எடுத்து வைக்கின்றனர். இந்த 21வது நாளில் விரதத்தைப் பூர்த்தி செய்து கொள்ளும் விதமாக 21 நூல்களையும் திரியாகத் திரித்து இழை மாவில் வைத்து இழை எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வீட்டுக்கு மூத்த ஆண்மகனாய் இருப்பவர் மற்றவர்களுக்கு இழை எடுத்துத் தருவார்கள். நகரத்தார் வீட்டுப் பெண்கள் பிள்ளையார் நோன்பு தினத்தில் பாசிப்பருப்பு பனியாரம், வடைகள் மற்றும் வகைவகையான பொரிகள் என்று சுவையாகத் தயாரித்து வழங்கி விரதத்தை முடித்து வைப்பார்கள்.
தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், அனைத்து நாடுகளிலும் வசிக்கும் நகரத்தார் வீடுகளில் இந்த "பிள்ளையார் நோன்பு" தவறாமல் கடைப்பிடிக்கப் படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் நகரத்தார்கள் பிள்ளையார் நோன்பை சரியான நாளில் கடைப்பிடிக்க முடியா விட்டாலும் கார்த்திகை அல்லது மார்கழி மாதத்தில் தங்களுக்குக் கிடைக்கும் ஒரு பொது விடுமுறை நாளன்று தங்களது சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்புகளின் மூலம் இந்த பிள்ளையார் நோன்பைக் கொண்டாடி விடுகின்றனர் என்பது மேலும் ஒரு சிறப்பான விசயமாகும்.