மும்பையில் இடம் பெற்றுள்ள கோயில்கள்
by Geethalakshmi[ Edit ] 2010-04-30 23:31:07
மும்பையில் இடம் பெற்றுள்ள கோயில்கள்
அரபிக் பெருங்கடலின் மேற்கு திசையில் இடம் பெற்றுள்ள மும்பை மாநகரம். மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரம். இந்த மும்பையில் மும்பாதேவி மந்திர், புலேஷ்வர் மந்திர், பாணகங்கா குளம், வல்கேஷ்வர் கோயில், பபுல்நாத் மந்திர், மகாலட்சுமி கோயில், மகரேஸ்வர் மகாதேவ் மந்திர் சித்தி வினாயகர் கோயில் ஆகியவைகள் புகழ் பெற்ற கோயில்கள் என்று சொல்லலாம்.
இங்கு மும்பாதேவி வசிப்பதால் இந்த நகரம் மும்பை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது என்கிறார்கள். மும்பா தேவி பூமாதேவி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள். ஒரு காலத்தில் இந்நகரத்திலுள்ள மீனவர்கள் மும்பராகா என்ற அரக்கனால் கொடுமைப்படுத்தப் பட்டார்கள். அவனுடைய அராஜகத்தை தாங்க முடியாத மீனவர்கள் சக்தி தேவியை மனமுருகி பிரார்த்தனை செய்தார்கள். மீனவர்களின் பிரார்த்தனையை மதித்து மும்பா தேவி அவதரித்தாள். மீனவர்களை காக்கும் பொருட்டு மும்பாதேவி மும்பராகா என்ற அரக்கனை அழித்து அந்த இடத்தில் நிரந்தரமாக வாசம் புரிந்தாள். மீனவர்கள் மும்பா தேவியின் மகிமையைப் போற்றி மும்பா தேவி கோயில் ஒன்று கட்டினார்கள். ஒன்றாம் நூற்றாண்டில் மீனவர்களால் கட்டப்பட்ட இந்தப் பழமையான கோயில் நாளடைவில் சேதமடைந்து மறுபடியும் 1878 ஆம் ஆண்ழல் ஆங்கிலேயர்கள் இந்தக் கோயிலை புலேஷ்வர் என்ற இடத்தில் கட்டினார்கள். இந்தக் கோயிலைச் சுற்றி பல நகைக் கடைகள் இருக்கின்றன. புகழ் பெற்ற ஜாவேரி பஜார் இந்தக் கோயிலருகே இடம் பெற்றிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மும்பையிலுள்ள புலேஷ்வர் என்ற இடம் அமைதிக்கும் மனநிறைவுக்கும் பெயர் பெற்றது. பால் வடியும் முகம் கொண்ட சிவபெருமானை மக்கள் இந்த புலேஷ்வர் கோயிலில் வழிபடுகிறார்கள். புலேஷ்வர் இடத்தின் அமைதியும் மனசாந்தியும் பல சாதுக்களை கவர்ந்தது. தியானம் செய்ய புலேஷ்வர் மந்திர் தகுந்த இடம் என்று சொல்லலாம். 1927 ஆம் ஆண்ழல் ஜகத்குரு ஸ்ரீ| அனந்தாசாரியாரால் கட்டப்பட்ட பாலாஜி மந்திரை மும்பையின் குட்டித் திருப்பதி என்று அழைக்கிறார்கள். இந்தக் கோயிலின் சுவர்கனைச் சுற்றி மாட்டப்பட்டுள்ள தஞ்சாவூர் ஓவியங்கள் இங்கு வரும் பக்தர்களின் கண்களை கவருகின்றன.
ஸ்ரீராமர் சீதையைத் தேடி இலங்கைக்கு செல்வதற்கு முன்பு தன் தம்பி லட்சுமணருடன் தெற்கு மும்பையில் தங்கியதாகவும் அந்தச் சமயத்தில் அவருக்கு தாகம் எடுத்ததால் தன்னுடைய அம்பை பூமியை நோக்கி எய்ததால் அந்த இடத்திலிருந்து கங்கையைப் போல தண்ணீர் பீரிட்டுக் கொண்டு பாய்ந்ததால் அந்த குளத்தை பாணகங்கா என்ற பெயரால் மக்கள் அழைக்கிறார்கள். பானகங்கா குளத்தைச் சுற்றி பல கோயில்கள் இடம் பெற்றுள்ளன. சில்ஹாரா பரம்பரையின் அரசன் 13ஆம் நூற்றாண்ழல் வல்கேஷ்வர் கோயிலைக் கட்டினான் என்று வரலாறு சொல்கிறது. பானகங்கா குளத்திற்கு அருகே சாந்த துர்க்கை கோயிலும் இடம் பெற்றிருக்கிறது. செங்குத்தான படிகளைக் கொண்ட பபுல்நாத் கோயில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் இருந்து அரபிப் பெருங்கடலின் முழுமையான காட்சியைப் பார்த்து ரசிக்கலாம். 18ஆம் நூற்றாண்டில் இந்த இடத்தில் பபுல் மரத்தோப்புகள் இருந்ததாகவும் அந்தச் சமயத்தில் சிவபெருமானும் பார்வதி தெவியும் இந்தத் தொப்பில் தங்கியதாக புராணங்கள் சொல்லுகின்றன. இந்த பபுல்நாத் மந்திரில் பார்வதி தேவி கர்ப்பகிரக அன்னையைப் போல காட்சி தருகிறாள். குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இந்த அன்னையைப் பிராத்தனை செய்து நம்பிக்கையோடு செல்கிறார்கள்.
மகாலட்சுமி, மகாகாளி, மகாசரஸ்வதி ஆகிய மூன்று சக்தி தேவிகளைக் கொண்ட மகாலட்சுமி கோயில் அரபிக் கடலோரத்தில் இடம் பெற்றிருக்கிறது. அரபிக் பெருங்கடலின் அலைகள் மகாலட்சுமி கோயிலின் பின்புறத்தைத் தொட்டுச் செல்வதும் அதனை ஒட்டி நீண்டு செல்கிற பாதையின் தொலைவில் ஹாஜி-அலி-தர்கா காட்சி தருவது நம்முடைய கண்களை கவருகின்றன. இந்த நகரம் மகாலட்சுமியின் இருப்பிடமாதலால் மும்பை மாறிவரும் வணிகத்துறையாக அமைந்தது. மகாலட்சுமி கோயிலில் நவராத்திரி பண்டிகைகள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்கிறார்கள். மும்பையில் 19ஆம் நூற்றாண்டில் சிவபெருமானுக்காக மகரேஸ்வர் மகாதேவ கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் பழம் பெரும் ஆலமரமொன்று காட்சி கொடுப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் நாகலிங்க மரம் இடம் பெற்றிருப்பது அபூர்வமென்று சொல்லலாம்.
1801ஆம் ஆண்டில் இந்தூரை ஆண்டு வந்த ராணி அகில்யாபாய் ஹோல்கர், சித்தி வினாயகர் கோயிலை கட்டினார். முன்பு இந்தக் கோயிலைச் சுற்றி பீமா நதி ஓடிக் கொண்டிருந்தது. சித்தி வினாயகர் கோயிலின் மேற்கூரைகள் தங்கத் தகடுகளால் அமைந்திருக்கிறது. அஷ்ட வினாயகர் வடிவங்களைக் கொண்ட மரக்கதவுகள் இந்தக் கோயிலின் தனிச்சிறப்பாகும். ஒரு கையில் தாமரைப் பூவும், இரண்டாவது கையில் கோடாரியும், மூன்றாவது கையில் கொழுக்கட்டையும், நான்காவது கையில் ஜபமாலையும் கொண்டு காட்சி தரும் வினாயகரின் அழகை வார்த்தைகளால் சொல்லி வருணிக்க முடியாது. காரியங்கள் வெற்றி பெறுவதற்கு சித்தி வினாயகரை வேண்டிக் கொண்டு சென்றால் அந்தக் காரியம் கைகூடுவது இந்தக் கோயிலின் தனிச்சிறப்பாகும்.
மும்பை சென்றால் இந்தக் கோயில்களைக் காணாமல் வந்து விடாதீர்கள்...