கொரியப் போர்
by Geethalakshmi[ Edit ] 2010-05-29 20:03:15
கொரியப் போர்
கொரியப் போர் என்பது, 1950 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி முதல் 1953 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி வரை வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடம் பெற்ற போரைக் குறிக்கும். இரண்டு கொரியாக்களுமே தமது சொந்த அரசாங்கங்களின் கீழ் கொரியாவை ஒருமைப்படுத்த முயன்றன. இப் போரில் இரண்டு அரசாங்கங்களுக்குமே வெளிச் சக்திகளின் ஆதரவு இருந்தது. "கொரியப் போர்" என்பது முன்னர் குறிப்பிட்ட தீவிரமான போர்க்காலத்துக்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகளையும் சேர்த்துக் குறிக்கப் பயன்படுவது உண்டு. கொரியா முழுமைக்குமான தேர்தல் தொடர்பாக எழுந்த பிணக்குக்குப் பின்னரும், எல்லைப் பிரச்சினை தீவிரமானதைத் தொடர்ந்தும் 1950 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள் வட கொரியப் படைகள் தென் கொரியாவைத் தாக்கின. பரந்த பனிப் போரின் ஒரு பகுதியாக ஐக்கிய அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் கொரியாவில் தலையிட்டதனால் இப்போர் மேலும் விரிவடைந்தது.
பெயர்
இப் போர் தொடங்கிய நாளையொட்டி இதனைத் தென் கொரியாவில் 6-25 போர் என்று அழைப்பர். ஆனாலும் முறைசார்ந்த வகையில் இது கொரியப் போர் என்றே குறிப்பிடப்படுகிறது. வட கொரியாவிலும் பொதுவாகக் கொரியப் போர் என்றே இது அழைக்கப்பட்டாலும், முறையாகக் குறிப்பிடும்போது இதனைத் தந்தையர் நாட்டு விடுதலைப் போர் என்பர். அமெரிக்காவில் இதனைக் காவல்துறை நடவடிக்கை - கொரியப் பிணக்கு - என்பர். போர் அறிவிப்பு ஒன்றை அமெரிக்க மேலவை வெளியிடவேண்டிய தேவையை இல்லாமல் செய்வதற்காகவே போர் என்று குறிப்பிடுவதை அமெரிக்கா தவிர்த்தது என்பர். சில சமயங்களில் இதனை மறக்கப்பட்ட போர் அல்லது அறியப்படாத போர் எனவும் குறிப்பிடுவது உண்டு. இது 20 ஆம் நூற்றாண்டின் முக்கியமானதொரு போராக இருந்தும், இரண்டாம் உலகப் போர், வியட்நாம் போர் போன்றவற்றிலும் மிகக் குறைந்த முக்கியத்துவமே இதற்குக் கொடுக்கப்பட்டதே இப் பெயர்களுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இப் போரில் பயன்படுத்தப்பட்ட நுட்பங்கள் முதலாம் உலகப் போரிலும், இரண்டாம் உலகப் போரிலும் பயன்படுத்தப்பட்ட நுட்பங்களின் தனித்துவமான கலவையாக இருந்தது. தொடக்கத்தில் விரைவான காலாட்படை முன்னேற்றமும் அதைத் தொடர்ந்து அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதும் விமானக் குண்டு வீச்சுக்களும் இடம்பெற்றன. எனினும் இரண்டு தரப்பினரும் தாம் கைப்பற்றிய பகுதிகளைத் தக்க வைக்கமுடியாமல் போனதால் ஜனவரி 1951 இல் இது முதலாம் உலகப் போர்ப் பாணியிலான பதுங்குகுழிச் சண்டையாக உருவானது. இறுதியில் ஒருவரும் வெற்றிபெற முடியாத நிலை ஏற்படும்வரை இது நீடித்தது.