நூறாண்டுப் போர்
by Geethalakshmi[ Edit ] 2010-05-29 20:03:55
நூறாண்டுப் போர்
நூறாண்டுப் போர் என்பது 1337 ஆம் ஆண்டு முதல் 1453 ஆம் ஆண்டுவரை பிரான்சின் இரண்டு அரச குடும்பங்களிடையே நடந்த ஆட்சியுரிமைக்கான போரைக் குறிக்கும். பிரான்சை ஆண்ட கப்பீஷன் அரசமரபு வாரிசு இன்றி அற்றுப்போனபோது இந்நிலை ஏற்பட்டது. ஆட்சி உரிமைக்கான இரண்டு முதன்மையான போட்டியாளர்களாக வால்வா (Valois) பிரிவினரும், பிளாண்டாஜெனெட் (Plantagenet) அல்லது அஞ்சு என அழைக்கப்பட்ட பிரிவினரும் இருந்தனர். வால்வா பிரிவினர் பிரான்சின் அரச பதவியைக் கோரிய அதே வேளை, இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாண்டாஜெனெட் பிரிவினர் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளினதும் அரச பதவிகள் தமக்கே உரியன என்றனர். இங்கிலாந்தின் பிளாண்டாஜெனெட் அரசர்கள், பிரான்சின் அஞ்சு, மற்றும் நோர்மண்டி பகுதிகளை அடியாகக் கொண்டவர்கள். பிரெஞ்சுப் படை வீரர்கள் இரண்டு பகுதிகளிலும் சேர்ந்து போரிட்டனர். பர்கண்டி, அக்கியூட்டேன் பகுதிகளைச் சேர்ந்தோர் பிளாண்டாஜெனெட் பிரிவினருக்குக் குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்கினர்.
பிணக்கு 116 ஆண்டுகளாக நீடித்த போதிலும், இடையிடையே ஒப்பீட்டளவில் அமைதி நிலவிய காலங்களும் உண்டு. இவற்றுள் இரண்டு அமைதிக்காலங்கள் ஓரளவு நீண்டவை. இவை 1360 - 1369 வரையும், அடுத்தது 1389 - 1415 வரையுமான காலப்பகுதிகளாகும். அமைதிக் காலப்பகுதியைக் கழித்துப் பார்க்கும்போது போர் 81 ஆண்டுகள் நடைபெற்றுள்ளது எனலாம். இறுதியில் பிளாண்டாஜெனெட் பிரிவினர் பிரான்சை விட்டுத் வெளியேற்றப்பட்ட பின்னரே போர் முடிவுக்கு வந்தது. எனினும், டுவா ஒப்பந்தப்படி பிரான்சின் ஆறாம் சார்லஸ் இறந்த பின்னர் ஆட்சியுரிமை இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றிக்கு என இணங்கிக் கொள்ளப்பட்டதால் இப் போர் பிளாண்டாஜெனெட் பிரிவினருக்கு ஒரு உத்திசார்ந்த வெற்றியாக அமைந்தது. இதன்படி 1431 ஆம் ஆண்டில் ஆறாம் ஹென்றி பாரிசில் முடிசூட்டிக் கொண்டார். எனினும், 1450களில், வால்வா பிரிவினர் பிளாண்டாஜெனெட் பிரிவினரைப் பிரான்சின் பெரும் பகுதிகளில் இருந்து வெளியேற்றுவதில் வெற்றி கண்டனர்.
இப் போர் உண்மையில் தொடர்ச்சியாக நடந்த பல போர்களாகும். இது பொதுவாக மூன்று அல்லது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது. எட்வார்டியப் போர் (1337-1360), கரோலின் போர் (1369-1389), லங்காஸ்ட்ரியப் போர் (1415-1429), ஜான் ஒப் ஆர்க்கின் தோற்றத்துக்குப் பின்னான இங்கிலாந்து அரச மரபினரின் இறங்குமுகம் (1412-1431). சம காலத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மேலும் பல பிணக்குகள் இப் போருடன் தொடர்புடையவை. வாரிசுரிமைக்கான பிரெட்டன் போர், காஸ்ட்டிலிய உள்நாட்டுப் போர், இரண்டு பீட்டர்களுக்கு இடையிலான போர் என்பன இவற்றுட் குறிப்பிடத்தக்கவை. நூறாண்டுப் போர் எனும் சொற்றொடர், நிகழ்ந்த தொடர் நிகழ்வுகளைக் குறிக்க வரலாற்றாளர்கள் பிற்காலத்தில் பயன்படுத்தியது ஆகும்.