சிகாகோ மாநகர் - சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள்

by Nirmala 2009-11-10 16:47:40

சிகாகோ (Chicago) ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள ஒரு மாநகராகும். மத்திய-மேற்கு அமெரிக்க நிலப்பகுதியில் அமைந்திருக்கும் இந்நகர், வணிகம், தொழில், கலாச்சாரம் போன்ற அனைத்து துறைகளிலும் சிறப்புடன் விளங்குகிறது. இந்நகரில், இதன் வரலாற்று சிறப்பினால் அமெரிக்காவின் இரண்டாம் நகர் என்று வர்ணிக்கப்படுகிறது. மக்கள்தொகையில், நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்களை அடுத்து, சுமார் 3 மில்லியன் மக்கள்தொகையுடன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகராக விளங்குகிறது. சிகாகோ மாநகரை ஒட்டியுள்ள பெரும் புறநகர் பகுதி சிகாகோ நிலப்பரப்பு என்றே அழைக்கப்படுகிறது. இப்புறநகர் பகுதியில் சுமார் 9.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

இந்நகர் அமெரிக்காவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மிச்சிகன் ஏரியின் கரையில் அமைந்துள்ளது. உலகின் பெரிய 25 மாநகர்களில் ஒன்றான, இந்நகர் 1833 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, 1837 இல் நகராக உயர்த்தபட்டது. அக்காலக்கட்டத்தில், அமெரிக்க உள்நாட்டுக் கப்பல் போக்குவரத்திற்கு பெரிதும் உபயோகப்படுத்தப்பட்ட அமெரிக்கப் பேரேரிகளுக்கும், மிசிசிப்பி ஆற்றிக்கும் இடையே அமைந்த, போக்குவரத்து மையமாக வளர்ந்தது. இதன்பிறகு, மிகக்குறுகிய காலக்கட்டத்திலேயே நாட்டின் மிகச்சிறந்த வணிக மையமாகவும், தொழில் நகராகவும், சுற்றுலாத்தலமாகவும் வளர்ச்சி கண்டது. இன்றைய காலத்தில், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 44.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இம்மாநகருக்கு வருகை தருகின்றனர்.

சிகாகோ மாநகர் 1920-1930களில், உலகின் மிகக்கொடிய குற்றவாளிகளின் வாழ்விடமாகவும்(அல் கபுன்), ஊழல் அரசியல்வாதிகளின் கோட்டையாகவும் நோக்கப்பட்டது. சிகாகோ மாநகர் 1960-1970களில் இரயில்வே சார்ந்த கருவிகள் தயாரிக்கும் தொழிலில் முதன்மைபெற்று விளங்கியது.

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்

அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!


இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:


எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில் சென்று
சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
பின்பற்றும் தன்மை யாலே
துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
வளைவாயும் தோன்றி னாலும்
அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
அடைகின்ற ஆறே யன்றோ!



இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.'


பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!


அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.



2353
like
2
dislike
0
mail
flag

You must LOGIN to add comments