தமிழக சுற்றுலா தலம் - மேட்டூர் அணை

by Nirmala 2010-06-29 16:15:30

தமிழக சுற்றுலா தலம் - மேட்டூர் அணை



மேட்டூர் அணை சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் என்னும் ஊரில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது அணையைக் கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும். மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது.

1801 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் கிழக்கிந்திய சபை மேட்டூரில் அணைகட்டுவதற்கு முயன்றது; அப்பொழுது மைசூர் சமஸ்தானம் ஆட்சேபணைகள் எழுப்பியபடியால் அத்திட்டம் கைவிடப்பட்டது. பின்பு 1835 ஆம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளரைத் திரும்பவும் அணை கட்டுவதற்கு சம்மதம் பெற மைசூருக்கு ஆங்கிலஅரசு அனுப்பிவைத்தது. மைசூர் சமஸ்தானம் எதிர்த்ததால் முயற்சி கைவிடப்பட்டது.

1923ல் திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் உள்ள திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யரிடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் எடுத்து விளக்கினர். அவர் மைசூர் சமஸ்தானத்தாரை அணுகி திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்து எடுத்துரைத்தார். அம் முயற்சிக்குக் காரணமும் உண்டு சர்.சி.பி.ராமசாமி அய்யரின் முன்னோர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களே. மைசூர் சமஸ்தானத்தார் மீண்டும் ஆட்சேபணைத் தெரிவிக்கவே, தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து புயல் மற்றும் வெள்ள சேதத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு ஆண்டு தோறும் ரூ.30,00,000/- நஷ்டஈடாக மைசூர் சமஸ்தானத்தார் கொடுக்கவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சிதலைவர் மூலம் மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர். (அன்றைய தேதிக்கு ஒரு பவுன் விலை ரூ.30/-மட்டுமே, அதன் படி கணக்கிட்டால் ரூ.30,00,000/-க்கு 1 லட்சம் பவுனாகிறது ) வருடாவருடம் ரூ.30,00,000/-கொடுப்பதைக் காட்டிலும் , மேட்டூரில் அணைகட்டுவதற்கு சம்மதம் கொடுப்பதே சிறந்தது என திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் எடுத்துக்கூறி மைசூர் சமஸ்தானத்தை சம்மதிக்கவைத்து சம்மதக்கடிதம் பெற்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பிவைக்க வைத்தார்.

அணை குறித்த திட்ட ஆய்வு பணி 1905ல் துவங்கி 1910 வரை நடந்தது. இறுதியில் மேட்டூரில் அணை கட்ட முடிவு செய்து, 1924 மார்ச் 31ம் தேதி இந்திய அரசின் ஒப்புதலுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு, டிச.11ம் தேதி அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, 1925 ஜூலை 20ம் தேதி மேட்டூர் அணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தலைமை வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு என்ஜினியர் எல்லீஸ், நிர்வாக என்ஜினியர் வெங்கட்ராமையர், முதன்மை தலைமை இன்ஜினியர் முல்லிங்க்ஸ் தலைமையில் 24 என்ஜினியர்கள் அடங்கிய குழு அணை கட்டும் பணியை தொடங்கியது.

மேட்டூர் அணை கட்டும் பணியில் ஒன்பது ஆண்டுகாலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 1934ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி கடைசி கல் வைக்கப்பட்டு கட்டுமானப் பணி நிறைவு பெற்றது. அணையைக் கட்டி முடிக்க அப்போது ஆன செலவு ரூ.4.80 கோடியாகும். அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஜான் பெடரிக் ஸ்டான்லி, 1934ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி பாசனத்திற்கு நீரை திறந்து வைத்து, அணையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஆளுநர் ஸ்டான்லியின் பெயரையே அணைக்கும் சூட்டி, ஸ்டான்லி நீர்த்தேக்கம் என வைத்தனர்.



அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்களாகும். அணையின் உயரம் 120 அடிகள். மேலும் இதன் கொள்ளளவு 93.4 டி.எம்.சி. (1 டி.எம்.சி = 100 கோடி கன அடி). மேட்டூர் அணையின் உயரம் 124 அடி நீரை தேக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட உயரம் 120 அடி முழுக் கொள்ளளவு 124 அடிக்கு 9,347 கோடி கண அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. 1 tmc தண்ணீர் குறைந்தால் அணையில் 1.25 அடி தண்ணீர் குறையும். 1 அடி தண்ணீர் குறைந்தால் 0.75 tmc குறையும்.

சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம் என மொத்தம் 11 காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களுக்கு மேட்டூர் தண்ணீர் போகிறது. மொத்தம் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேட்டூர் நீர்த்தேக்க வளாகத்திலேயே 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் மின் நிலையமும் உள்ளது.

3 முறை மேட்டூர் அணையை மின்னல் தாக்கியது. இருப்பினும் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மேட்டூர் அணை 75 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் வகையில், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியை பவள விழாவாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பவள விழா ஆண்டை முன்னிட்டு, மேட்டூர் அணை வலது கரையில் லிப்ட் வசதியுடன் கூடிய 75 அடி உயர கோபுரம் கட்டப்படுகிறது. அதன் அருகில் அணை வரலாறு தொடர்பான புத்தகங்கள் அடங்கிய நூலகம், கான்பரன்ஸ் ஹால் கட்டப்படுகிறது.மேட்டூர் அணை கட்டடத்தில் ஸ்டான்லி அணை என்று பெரிய அளவில் இரவிலும் ஒளிரும் வகையில் எழுத்துக்கள் வடிவமைக்கப்படுகிறது. மேட்டூர் அணை பூங்கா நுழைவாயிலில் பவளவிழா நினைவுத் தூண் கட்டப்படவுள்ளது.
2447
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments