ஆண்டாள் திருப்பாவை
by Rekha[ Edit ] 2009-11-13 10:27:52
ஆண்டாள் திருப்பாவை
மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
நீராடப்போதுவீர், போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வ சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்தகண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோரெம்பாவாய்
"அழகிய ஆபரணங்களை அணிந்த சிறுபெண்களே! செல்வம் மிகுந்த ஆயர்பாடியில் தொண்டுசெய்யும் செல்வத்தையும் கன்னிப்பருவத்தையும் உடையவர்களே, மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில், பௌர்ணமி நன்னாளில், கூர்மையான வேலையுடையவனும் பகைவர்க்கு கொடுமை செய்பவனும் ஆகிய நந்தகோபனுடைய குமாரனும், அழகு நிறைந்த கண்களையுமுடைய யசோதைக்கு இளம் சிங்கக்குட்டி போன்றவனும், கரிய மேகம் போன்ற மேனியையும், செந்தாமரை போன்ற கண்களையும், சூரியனைப்போல பிரகாசமாயும் நிலவைப்போல குளிர்ந்த முகத்தையுமுடைய நாராயணன், நாம் விரும்பிய வரங்களைத்தந்து அருள் புரிவான். எனவே, இந்த நோன்பில் கலந்து கொண்டு நீராட விரும்புகின்றவர்கள், வாருங்கள்"