மனித உரிமைகள்
by Nirmala[ Edit ] 2009-11-13 14:56:03
மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.
சாதி, மதம், பால், இனம், நாட்டுரிமை ஆகிவற்றிற்கு அப்பால், ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொதிந்திருக்கக் கூடிய பிறப்புரிமைகளை, மனிதனின் சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளை, மனித உரிமைகள் என்று நாம் அழைக்கின்றோம். மனிதர்களுக்கு மனித உரிமைகள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதால் சில நேரங்களில் மனித உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்றும், இயற்கை உரிமைகள் என்றும், பிறப்புரிமைகள் என்றும், உள்ளார்ந்த உரிமைகள் என்றும் நாம் அழைக்கின்றோம். ஒவ்வொரு நாட்டிலும் அதற்கேற்ற, உரிய சட்டமியற்றும் வழிமுறைக்கு ஏற்ப இந்த மனித உரிமைகள் சட்ட வடிவம் பெறுகின்றது. டி.டி பாசு அவர்கள் மனித உரிமைகளை வரையறுக்கும் பொழுது "எவ்வித மறுபயனுமின்றி மனிதனாகப் பிறந்த காரணத்தினாலேயே அரசிற்கு எதிராக ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்கக் கூடிய குறைந்தபட்ச உரிமைகளே மனித உரிமைகள்" என்று குறிப்பிட்டுள்ளார். 1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைப்பெற்ற மனித உரிமைகள் குறித்த உலக மாநாட்டின் பிரகடனத்தில் "மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் என அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. மனிதனாகப் பிறந்த காரணத்தினால், ஒருவனுக்கு இயற்கையிலேயே உடன் பிறந்த உரிமைகள் மனித உரிமைகள். இந்த உரிமைகள் எந்த ஒரு சமுதாயத்தினாலோ, அரசினாலோ அல்லது அரசியல் அதிகார அமைப்புகளினாலோ உருவாக்கப்பட்டதல்ல. அதனால்தான் எந்த ஒரு அரசிற்கும், அதிகார அமைப்பிற்கும் மனித உரிமைகளை மீறுவதற்கான அதிகாரம் அளிக்கப்படவில்லை.
மனித உரிமைகளின் வகைகள்
மனித உரிமைகள் பொதுவாக பிரிக்கப்பட முடியாதவை. மேலும், அவை ஒன்றோடு ஒன்று சார்ந்து இருப்பவை. அதனால் பல்வேறு வகையான மனித உரிமைகள் இருப்பதற்கு சாத்தியமில்லை. முக்கியத்துவத்தின் அடிப்படையிலும், அனைத்து மனித உரிமைகளும் சமமான முக்கியத்துவத்தினை பெறுகிறது. அதனால்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் எவ்விதமான வகைப்பாடுகளும் காணப்படவில்லை. ஆனால் அதற்குப் பின்னர் ஐ.நாவின் உறுப்பு நாடுகள் மனித உரிமைகளை ஐந்து வகைகளாகப் பிரித்தது.
அவை :
1.குடிமையியல்
2.அரசியல் உரிமைகள்
3. பொருளாதார உரிமைகள்
4. சமூக உரிமைகள்
5. கலாச்சார உரிமைகள்