கடவுள் வாழ்த்து – திருக்குறள் உரை:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
அ தான் முதல் எழுத்து. அதுக்கு அப்புறம் தான் எல்லா எழுத்தும். அது மாதிரி முதல் கடவுள் ஒருத்தர் இருக்காரு. அவருக்கு அப்புறம் தான் உலகத்துல எல்லாமுமே.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 2
அறிவு பெறுவதற்காகத் தான் படிக்கிறோம். ஆனா, அறிவே உருவமானவர் கடவுள். அப்படிப்பட்டவரோட காலைத் தொட்டு வணங்காம இருந்தா, அப்புறம் நாமெல்லாம் படிச்சு என்ன பயன்?
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 3
கடவுளை வணங்குறவங்க இந்த உலகத்துல நீண்ட நாட்கள் நல்லா வாழ்வாங்க.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 4
விருப்பு வெறுப்பு இல்லாதவர் கடவுள். அவரை வணங்குறவங்களுக்கு என்னிக்கும் துன்பம் வராது.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5
கடவுளோட புகழ் பாடி மகிழ்கிறவங்க, அவங்களோட செயல்களின் விளைவா வர்ற நன்மை தீமை இரண்டையுமே ஒரே மனநிலையோட எதிர்கொள்வாங்க.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். 6
கண், காது, மூக்கு, வாய், தொடுறதுன்னு ஐந்து புலன்களில் இருந்தும் விடுபட்டவர் கடவுள். அதனால அவர் தவறு இழைக்கிறதில்ல. இப்படிப்பட்ட அவரைப் பின்பற்றுறவங்களும் நீண்ட நாள் வாழ்வாங்க.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. 7
தனக்கு ஈடு இணையே இல்லாதவர் கடவுள். அவர் கிட்ட சரணைடைஞ்சா ஒழிய நம்ம மனக்கவலையை ஒழிக்கிறது ரொம்ப சிரமம்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. 8
அறக் கடல் போன்றவர் கடவுள். அவரோட காலைச் சேர்ந்தவங்க மட்டுமே பிறவிக் கடலை நீந்த முடியும்.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 9
கடவுளோட காலைத் தலை வணங்கி கும்பிடாதவங்களுக்கு, சிந்தனை, உணர்வு, உயிர் இருந்தும் இல்லாத மாதிரி தான் கணக்கு.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். 10
பிறவிங்கிறது பெரிய கடல் மாதிரி. அத நீந்தித் கடக்கணும்னா, இறைவனோட காலைப் பிடிச்சுக்கிட்டா மட்டும் தான் முடியும்.