அழகுத் தெய்வம் - பாரதியார் - கவிதை

by Geethalakshmi 2010-07-25 22:24:02

அழகுத் தெய்வம் - பாரதியார் - கவிதை


மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!
அழகென்னுந் தெய்வந்தான் அதுவென்றே யறிந்தேன்.

யோகந்தான் சிறந்ததுவோ தவம்பெரிதோ என்றேன்;
யோகமேதவம் தவமே யோகமென வுரைத்தாள்.
ஏகமோ பொருளன்றி இரண்டாமோ என்றேன்;
இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம் என்றாள்.
தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ
தாகத்தின் துயர்மழைதா னறிந்திடுமோ வென்றேன்
வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்
விருப்புடனே பெய்குவதோ வேறாமே என்றாள்.

காலத்தின்விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியா மென்றாள்.
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலா மென்றாள்.
ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை யென்றேன்
எண்ணினால் எண்ணியது நண்ணுங்கா ணென்றாள்
மூலத்தைச் சொல்லவோ வேண்டாமோ என்றேன்
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.

அழகுத் தெய்வம் - பாரதியார் - கவிதை
1845
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments