அறிவே தெய்வம் - பாரதியார் - கவிதை

by Geethalakshmi 2010-07-25 22:24:47

அறிவே தெய்வம் - பாரதியார் - கவிதை


ஆயிரந் தெய்வங்க ளுண்டென்று தேடி
அலையு மறிவிலிகாள் - பல்
லாயிரம் வேத மறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கு மதியிலிகாள் - எத
னூடுநின் றோங்கு மறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ - பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?

வேடம்பல் கோடியொ ருண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே - ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.

நாமம்பல் கோடியொ ருண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே.

போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே - உப
சாந்த நிலையேவே தாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டு மறைகளெலாம் - நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்
கவங்கள் புரிவீரோ?

உள்ளத னைத்திலு முள்ளொளி யாகி
யொளிர்ந்திடு மான்மாவே - இங்குக்
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?

மெள்ளப் பலதெய்வம் கூட்டிவளர்த்து
வெறுங்க தைகள் சேர்த்துப் - பல
கள்ள மதங்கள் பரப்புவற் கோர்முறை
காட்டவும் வல்லிரோ?

ஒன்றுபிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம் - என்றும்
ஒன்றுபிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.

அறிவே தெய்வம் - பாரதியார் - கவிதை
1874
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments