தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல்

by Rameshraj 2010-09-17 09:21:59

சென்னை, செப்.16: தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் உறுதியாகி அரசு மருத்துவமனைகளில் 700 பேர் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்கள் பரவி வருகின்றன. எச்1என்1 வைரஸ் மூலம் பரவும் பன்றிக் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
10 பேர் இறப்பு: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் காரணமாக கடந்த ஒன்பது மாதங்களில் மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் தலைமைச் செயலக உதவி மக்கள் தொடர்பு அதிகாரி மோகனவேலு உள்பட 3 பேர் பன்றிக் காய்ச்சல் காரணமாக இறந்தனர்.
பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று, கடைசியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிலர் இறப்பதும் தொடர்கிறது.
4,308 பேருக்கு அறிகுறிகள்: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த ஒன்பது மாதங்களில் 4,308 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இப்போது 700 பேர் பன்றிக் காய்ச்சல் உறுதியாகி, தனிப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
சென்னை, கோவை, கன்னியாகுமரியில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது.
அறிகுறிகள் என்ன? இருமல்-சளியுடன் வைரஸ் காய்ச்சல், தொண்டை வலி, தலை வலி, உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறிகள் தொடரும் நிலையில், தாமதிக்காமல் பன்றிக் காய்ச்சலுக்கு உரிய தொண்டைச் சளி பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
மேலும் ஆரம்ப அறிகுறிகள் தோன்றிய உடனேயே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் ஆரம்ப அறிகுறிகள் தோன்றிய உடனேயே சிகிச்சை பெற்றால், உயிரிழப்பைத் தடுக்க முடியும் என்று அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.
எங்கு பரிசோதனை? சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வு நிலையம், சென்னை அரசு பொது மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் பன்றிக் காய்ச்சலுக்கு உரிய தொண்டைச் சளி பரிசோதனை வசதி இலவசமாக அளிக்கப்படுகிறது. சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை உள்ளிட்ட தனியார் மையங்களிலும் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை வசதி உள்ளது.
1400 பேருக்கு தடுப்பூசி: பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் தடுப்பு மருந்து (மூக்கில் விடும் மருந்து) வழங்குதல் மற்றும் தடுப்பூசி போடும் திட்டம் சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வு நிலையத்தில் கடந்த திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. தடுப்பு மருந்துக்கு ரூ.150-ம், தடுப்பூசிக்கு ரூ.250-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு தினங்களில் மட்டும் மொத்தம் 1,400-க்கும் மேற்பட்டோர் தடுப்பு மருந்தோ, தடுப்பூசியோ போட்டுக் கொண்டுள்ளனர்.
தடுப்பூசி யாருக்குத் தேவை? குடும்பத்தில் யாராவது ஏற்கெனவே பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் தடுப்பூசி மருந்து போட்டுக் கொள்வது நல்லது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் பெண் சாவு
சென்னை அரசு பொது மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் 50 வயது பெண் இறந்தார். அறிகுறிகள் இருந்தபோதிலும், அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்படவில்லை என்று அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.
÷சென்னை திருவேற்காடு தேவி நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் பழனி. அவரது மனைவி குப்பம்மாளுக்கு கடந்த சில தினங்களாக நிமோனியா காய்ச்சல், மூச்சிரைப்பு ஆகிய பாதிப்புகள் இருந்தன. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரது உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, அரசு பொது மருத்துவமனையில் புதன்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். அவர் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

Tagged in:

1668
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments