மஹானந்த் (ஹூக்ளி) : மேற்கு வங்க மாநிலம், மஹானந்த் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில், நாள்தோறும் தவறாமல் பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவர்களுக்கு, அப்பள்ளி தலைமை ஆசிரியர் பரிசளித்து வருகிறார்.
மேற்கு வங்க மாநிலம், ஹூப்ளி மாவட்டத்தில் உள்ள மஹானந்த் கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியராக இருப்பவர் ஸ்வப்பன் நியோகி. இந்த பள்ளிக்கூடத்தில், இரண்டு வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. அதன் அருகிலேயே கட்டப்பட்டு வந்த புதிய வகுப்பறை கட்டடங்கள், போதிய நிதி இல்லாததால், பாதியிலேயே நிற்கின்றன. தலைமை ஆசிரியர் தவிர, இந்த பள்ளிக்கூடத்திற்கு 3 ஆசிரியர்கள் மட்டுமே உண்டு. இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பெரும்பாலும், படிக்காத விவசாயக் கூலிகள். கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறியாததால், தங்கள் பிள்ளைகளை, பள்ளியிலிருந்து பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். தங்களுக்கு உதவியாக விவசாய வேலைகளை செய்யப் பழக்குகின்றனர். பெண் பிள்ளைகளை சமையல் வேலை உள்ளிட்ட வீட்டு வேலைகளை செய்யப் பழக்குகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, ஆண்டுதோறும் 12 மாணவர்கள் பள்ளியிலிருந்து நின்று விடுகின்றனர். 2008 ம் ஆண்டிலிருந்து, இந்த ஆண்டு வரை அந்த பள்ளியில், 27 மாணவர்கள் நின்று விட்டனர். அம்மாநிலத்தில் உள்ள பெரும் பாலான அரசு ஆரம்பப் பள்ளிகளில் இதே நிலைமை தான். ஹூப்ளி மாவட்டத்தில் உள்ள 3,000 அரசு ஆரம்பப் பள்ளிகளில், 3.5 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளிலிருந்து ஆண்டுதோறும் 12 சதவீத மாணவ, மாணவியர் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். மஹானந்த் கிராமத்தின் பள்ளி தலைமை ஆசிரியர் நியோகி, மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நின்று விடுவதை தடுக்க, அவர்களுக்கு சீருடை, தங்க மூக்குத்தி உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார். தற்போது, அவருடைய பள்ளியில் 90 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த ஆண்டுடன், ஓய்வு பெறவிருக்கும் நியோகி, இந்த ஆண்டு, 40 ஆயிரம் ரூபாய் செலவில், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு சீருடையும், மாணவியருக்கு தங்க மூக்குத்தியும் வழங்கியுள்ளார். மேலும், நாள் தவறாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, சிறு சிறு பரிசுப் பொருட்கள், உதவித் தொகையும் வழங்குகிறார். இதனால் பெற்றோரும், தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து நியோகி கூறியதாவது: இந்த பள்ளியில், படிக்கும் மாணவர்கள் வறுமையின் காரணமாக, தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். கல்வியின் முக்கியத்துவம், அதைப் பற்றிய விழிப்புணர்வு அவர்களின் பெற்றோர்களுக்கு இல்லை. எனவே, மாணவர்களை பள்ளிக்கூடத்திற்கு வரவழைப்பதற்காக, எனது சொந்த செலவில், சிறுசிறு பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறேன். இதற்கு, ஓரளவு பலன் கிட்டியுள்ளது. இவ்வாறு நியோகி கூறினார்.