அல்குர்ஆனை பொருளறிந்து படிப்பது
by Geethalakshmi[ Edit ] 2012-01-25 13:55:42
அல்குர்ஆனை பொருளறிந்து படிப்பது
திருமறையை சூரத்துல் ஃபாத்திஹாவிலிருந்து சூரத்துன்னாஸ் வரை முழுமையாகப் படித்து அதன் செய்திகளை அறிந்து கொள்ளவேண்டும். அதன் கட்டளைகளுக்கு கட்டுப்படுவது, அது தடுக்கும் செயல்களை விட்டும் விலக்கிக் கொள்வது. அதில் கூறப்பட்ட சம்பவங்களின் மூலம் படிப்பினை பெறுவது. இவ்வாறு அல்குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது முஸ்லீம்கள் அனைவரின் மீதும் கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களின் குணநலன் அல்குர்ஆனாகவே இருந்தது என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதின் பொருளும் இதுதான். எனவே நம்முடைய வாழ்க்கையை முற்றிலும் அல்குர்ஆனுக்கு கட்டுப்படும் வாழ்க்கையாக அமைத்துக்கொள்ளவேண்டும். அதுவே அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் மகத்தான நோக்கமாகும்.
இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்ட நபித்தோழர்களும் நபித்தோழியர்களும் அல்குர்ஆனுக்கு இணங்க தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வசனம் இறங்கும் போதும் அதன் கட்டளைகளுக்கு உடனே கட்டுப்படுபவர்களாக இருந்தனர். இதற்கு வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் உள்ளன. எனவே நாமும் அல்குர்ஆனைப் படித்து, அதன் அடிப்படையில் செயல்பட்டு ஈருலக வெற்றியைப் பெறுவோமாக!
திருக்குர்ஆன் பொதுமக்களுக்குப் புரியாது என்று கூறுவது தவறான கூற்றாகும். திருக்குர்ஆனின் அர்த்தம் மற்றும் விளக்கங்களை நேரடியாக அறிவதற்கு அரபி மொழியில் புலமை அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மொழி பெயர்க்கப்பட்டவற்றைப் படித்து அதில் உள்ள செய்திகளை புரிந்து கொள்வதற்கு சாதாரண அறிவே போதுமானது. ஒரு நூல் மொழிபெயர்க்கப்படுகிறது என்றால் அந்த மொழியை அறியாதவர்கள் அதனை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்குத்தான். எனவே குர்ஆனை அதன் மொழிபெயர்ப்பை புரிந்து கொள்ள முடியாதென்பது தவறானதும் அல்லாஹ்வின் வேதவசனங்களுக்கு மாற்றமான கூற்றுமாகும். அல்லாஹ் இதனை 54:32, 47:24 வசனங்களின் மூலம் உணர்த்துகிறான்.
''நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா?(54:32)''
''மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (47:24)''