அல்குர்ஆனை ஓதுதல்
by Geethalakshmi[ Edit ] 2012-01-25 13:56:07
அல்குர்ஆனை ஓதுதல்
பொருளறியாமல் படித்தாலும் ஆன்மீக ரீதியாக நன்மையை பெற்றுத்தரும் ஒரே நூல் அல்குர்ஆன் மட்டும்தான். திருக்குர்ஆனைப் ஓதுவதில் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன. அல்குர்ஆனை முறையாக, புரிந்து ஓதுபவர் மறுமையில் மலக்குமார்களுடன் இருப்பார். திருமறையைப் படித்தவர்களுக்காக அது மறுமையில் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யும். இதுபோன்ற இன்னும் பல நன்மைகளும் சிறப்புக்களும் உள்ளன. எனவே பொருட்செலவோ, கடின உடலுழைப்போ இன்றி குறைந்த நேரத்தில் நிறைந்த நன்மையைப் பெற்றுத் தரும் திருமறையை அதிகமாக ஓதிடவேண்டும்.
குறிப்பாக ரமலான் மாதத்தில் அதிமாக ஓதவேண்டும். ரமலான் மாதத்தில் ஒவ்வொரு முஸ்லீமும் ஒரு தடவையாவது குர்ஆனை முழுமையாக ஓதி முடிப்பது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் ஒன்றாகும்.
நபி(ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ரமலானில் ஒரு தடவை குர்ஆனை ஓதிக்காண்பிக்கப்பட்டது. அவர்கள் மரணிக்கும் வருடம் இரண்டு தடவை ஓதிக்காண்பிக்கப்பட்டது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி)
அல்குர்ஆனின் எழுத்துக்களை முறையாக உச்சரித்து, நிறுத்தி, நிதானமாக, ஓதவேண்டும்.
''(நபியே! இரவுத் தொழுகையான) அதில் குர்ஆனை (நன்கு திருத்தமாக) நிறுத்தி, நிறுத்தி ஓதுவீராக!'' என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். இதனால்தான் குர்ஆனை அழகாக, ராகமாக, ஓதாதவன் நம்மைச் சார்ந்தவனல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
குர்ஆனை ஓதுவதை விட்டும் பொடுபோக்காக இருக்கும் எனதருமை சகோதர, சகோதரிகளே! நாளை மறுமை நாளில் ஒரு நன்மைக்காக அங்கும் இங்கும் ஓடித் திரிந்து அலங்கோலப்பட்டு அது கிடைக்காமல் நரகில் விழ நேரிடும் அந்நாளை நாம் மறந்து விடக்கூடாது.
திருக்குர்ஆனை தினமும் படித்து பயனடைவோமாக!