ஆனந்த வாழ்க்கைக்கு

by kalai 2010-01-03 20:13:43

வாழ்க்கை வரம் நமக்கு... வாழத் தெரிந்தால்!
அப்படி வாழத் தெரிந்தவர்கள் இங்கே சில பேர். தெரியாதவர்கள்தான் பல பேர். அந்தச் சிலரைப் பலராக்கும் அக்கறைதான் இந்த இணைப்பின் நோக்கம்!
நம் வாழ்க்கையில் ஆனந்தம் அட்சயப் பாத்திரமாக இருக்க வேண்டும் என்பதுதானே நம் அனைவரது விருப்பமும்?! அதற்கு எந்தப் புரட்டிப் போடும் புரட்சியும் தேவையில்லை. நம்முள் கொஞ்சம் மாற்றம் போதும்.
''என்னை நானே கொண்டாடிக் கொள்கிறேன்'' என்பார் ஓஷோ ரஜினீஷ்!
அப்படி உங்களை நீங்களும் கொண்டாடுவதற்கு உங்கள் மனதை இன்னும் அழகாக்கும் சூட்சமம் சொல்லத்தான்... இந்த 'ஆனந்தமான வாழ்க்கைக்கு 100 டிப்ஸ்'!
வாருங்கள்... சதமடிப்போம்!
மனதில் ஊறட்டும் உற்சாகம்!
1. சந்தோஷம் என்பது வாங்கும் பொருட்களில் இல்லை. சந்தோஷத்தின் இருப்பிடம் மனம்தான். மனதின் கன்ட்ரோல் நம்மிடம்தான். எனவே, ஆனந்தமாக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் மட்டுமே.
2.. வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாகக் கழிக்காதீர்கள். கொஞ்சம் லகுவாக, நகைச்சுவையாக அணுகுங்கள். அருகில் இருப்பவர்கள் நகைச்சுவை சொன்னால் சிரியுங்கள். தினமும் இரண்டு, மூன்று நபர்களையாவது சிரிக்க வையுங்கள். சிரிப்பு ஒரு தொற்று நோய். இடம் விட்டு இடம் பெயர்ந்து ஆரோக்கியமாகப் பரவும்.
3. உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உணவும் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும்; உடலின் சக்தி தேவையை நிறைவேற்றும். உற்சாகமாக உணர்வீர்கள். உடற்பயிற்சியின்போது உடலில் சுரக்கும் 'எண்டோர்பின்'களால் (endorphins) மனது புத்துணர்வு பெறும் என்கிறது மருத்துவ உலகம்.
4. வேலை, கடமை இத்யாதிகளுக்கு மத்தியில் புத்தகம் படிப்பது, நன்றாக ஒரு குளியல் போடுவது, இசை கேட்பது... இப்படி ஏதாவது உங்கள் மனதுக்குப் பிடித்த ஒரு செயலுக்கு தினமும் சில நிமிடங்கள் ஒதுக்குங்கள். அதேபோல், தினமும் கொஞ்ச நேரம் உங்கள் மனதுக்கு மகிழ்ச்சி தரும் பசுமையான நினைவுகளை அசைபோடுங்கள்.
5.. ஆனந்தம் என்பது 'லக்' அல்ல, நாம் எடுக்கும் முடிவுகளின் விளைவுதான் என்பதில் தெளிவாக இருங்கள். அன்னப் பறவையாக மாறி நல்லவற்றையும், ஆனந்தம் தருபவற்றையும் அதிகம் கவனியுங்கள். உங்களைக் கடந்து போகும் சம்பவங்களில், சந்தோஷமான விஷயங்களை அதிகம் உள்வாங்குங்கள்.
6.. தாழ்வு மனப்பான்மையைத் தூக்கிக் கடலில் போடுங்கள். ஏதேனும் தவறு, தோல்வி நடந்தால் அதற்குரிய காரணத்தை ஆராய வேண்டுமே தவிர... நத்தை ஓட்டுக்குள் முடங்கிவிடக் கூடாது.
7. உங்கள் மனதை நீங்கள்தான் உற்சாகப்படுத்த வேண்டும். குழந்தைகளுடன் செலவிடும் சந்தோஷ தருணங்கள், நல்ல காமெடி திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை உங்களை ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
8. திருத்தமாக உடையணிந்து நேர்த்தியாக இருக்கப் பழகுங்கள். மனோரீதியாக அது உங்களை தன்னம்பிக்கையாகவும், ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் வைக்கும்.
9. புது இடங்களைப் பார்ப்பது, புது மனிதர்களுடன் பழகுவதெல்லாம் உற்சாகமான வாழ்க்கையின் வழித்தடங்கள். எனவே, அவ்வப்போது 'அவுட்டிங்' செல்லுங்கள். பரிசுத்தமான இயற்கையின் இருப்பிடங்கள் இதற்கு பெட்டர் சாய்ஸ்!
10. ஆன்மிகவாதியாக இருங்கள். ஆனால், மதவாதியாக மாறிவிடாதீர்கள். உங்களுக்கு ஆனந்தமும் நிம்மதியும் தரும் நூல்களை வாசியுங்கள்.
11. கவலைகள் இல்லாத மனிதன் இல்லை. அவற்றையும் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே ஏற்றுக் கொள்ளுங்கள். காலம், கவலைகளை ஆற்றிவிடும்.
12. விருப்பமிருந்தால் ஒரு செல்லப் பிராணியை வளருங்கள். அதனுடன் தினமும் நேரம் செலவிடுங்கள். எதிர்பார்ப்பில்லாத அன்பு, அதனிடம் நிறையவே கிடைக்கும்!
13. தினமும் காலையில் ஒரு ஆனந்தமான நாள் உங்களுக்காகக் காத்திருக்கிறது என்று விழித்துக் கொள்ளுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அன்றைய நாளின் சந்தோஷங்களை அசைபோடுங்கள். யாரையேனும் காயப் படுத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென முடிவெடுங்கள்.
'நல்ல அம்மா' நீங்கள்தான்!
14. குழந்தைகள் ஏதாவது தவறு செய்தால், அது தவறு என்பதை அவர்கள் உணரச் செய்யுங்கள். உணர்ந்த பின்னும் மீண்டும் மீண்டும் அறிவுரை சொல்லாதீர்கள்.
15. உங்களுக்குப் பிடித்த எல்லாமே உங்கள் குழந்தைக்கும் பிடிக்க வேண்டும் என்பதில்லை. எனவே, குழந்தைகளின் ரசனைக்கும் மதிப்பு கொடுங்கள்.
16. குழந்தைகள் உங்களை எரிச்சல் படுத்தும். மதிக்காதது போல் தோன்றும். உங்களுக்குப் பிடிக்காததைச் செய்யும். பொறுமை ரொம்ப முக்கியம். அவர்கள் குழந்தைகள்தானே?!
17. 'என்னால முடியல... நீயாச்சும் டாக்டராகு' என்று உங்கள் ஏக்கங்களை அவர்களின் லட்சியங்களாக திணிக்காதீர்கள். குழந்தைகளின் விருப்பங்களைச் சார்ந்தே அவர்களின் எதிர்காலம் அமையட்டும்.
18. 'அம்மா, அப்பா இருக்கோம்' என்று எந்தச் சூழ்நிலையிலும் அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வைக் கொடுங்கள். பயத்தை பழக விடாதீர்கள்.
19. குழந்தைகளின் ரசனையை ஊக்கப்படுத்துங்கள். மியூஸிக், டான்ஸ், விளையாட்டு என்று அவர்களுக்கு விருப்பமானவற்றில் அவர்களைச் சேர்த்துவிடுங்கள்.
20. நீங்கள் ஏதாவது தவறு செய்தால் குழந்தையிடம் மன்னிப்புக் கேட்கலாம்... தவறில்லை. தப்பு செய்தால் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனும் பழக்கத்தை அது குழந்தைகளிடம் ஆழமாகப் பதித்து விடும்.
21. குழந்தைகளுடன் குடும்பமாக அவ்வப்போது வெளியே சென்று வருவது, பெற்றோர் - குழந்தைகள் பிணைப்பை வலுவாக்கும்.
22. 'உன்னைப் பத்து மாசம் சுமந்தவ நான்' என்றெல்லாம் டயலாக் விட வேண்டாம். அதைக் குழந்தைகள் அதற்குரிய பருவம் வரும்போது தானாக புரிந்துகொள்ளும்.
23. குழந்தைகளின் சின்னச் சின்ன குறும்புகளுக்கு தண்டனை கொடுக்காதீர்கள். வாழ்க்கையே ஒரு பாடம்தான். ஒவ்வொரு பருவத்திலும் சில சேட்டைகள் இருக்கும். அதை அனுமதியுங்கள்.
24. குழந்தைகளின் சின்னச் சின்ன வெற்றிகள், திறமைகளைப் பாராட்டுங்கள். பாராட்டுகள் அவர்களுடைய வழியை அவர்களுக்கு உறுதிப்படுத்தும். நல்ல செயல்களைத் தொடர்ந்து செய்ய உற்சாகப்படுத்தும்.
25. 'முக வாட்டமா, மன அழுத்தமா, ஆனந்தமா...' என்று குழந்தைகளின் மனநிலையை எப்போதும் கவனித்துக் கொண்டே இருங்கள். ஒரு நல்ல அம்மாவின் அடையாளம் அது.
26. குழந்தைகளுக்கு வீட்டில் உள்ள வேலைகளில் சின்னச் சின்ன பொறுப்புகளைக் கொடுங்கள். தப்பும் தவறுமாக அவர்கள் பழகட்டும். முடிவுகளை எடுக்க ஊக்கப்படுத்துங்கள். இவையெல்லாம் குழந்தைக்கு பொறுப்பையும் தன்னம்பிக்கையையும் தரும்.
27. அம்மா ஆனவுடன் உடற்பயிற்சியையெல்லாம் மூட்டை கட்டி வைத்தாயிற்றா? தவறு. சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள். உங்களைப் பார்த்து குழந்தைகளும் உடற்பயிற்சி செய்ய ஆர்வமாகும்.
28. வீட்டு வேலை ஒவ்வொன்றாக முளைத்துக்கொண்டேதான் இருக்கும். எனவே, உடல் அசதியாக இருந்தால் தூங்கி ஓய்வெடுங்கள். குழந்தைகள் பள்ளியில் இருந்து வரும்போது முகத்தில் அசதியைக் காட்டாதீர்கள்.
29. குழந்தைகளுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருங்கள். 'நான் அம்மா மாதிரி இருக்கணும்' என்று குழந்தை நினைக்க வேண்டும். உங்கள் சொல் ஒன்று.... செயல் ஒன்றாக இருப்பது எப்போதும் பயன் தராது.
30. குழந்தைக்கு ஒரு நல்ல தோழியாகவும் இருங்கள்.

Tagged in:

1836
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments