omam

by Rameshraj 2010-01-05 18:33:47

ஓமம்


இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது.

ஓமத்தில் மூன்று வகைகள் உள்ளன. ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும்.

ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது.

ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்றவை அடங்கியுள்ளன.

சீதசுரங் காசஞ் செரியாமந் தப்பொருமல்

பேதியிரைச் சல்கடுப்பு பேராமம்-ஓதிருமல்

பல்லொடுபல் மூலம் பகமிவைநோ யென்செயுமோ?

சொல்லொடுபோம் ஓமமெனச் சொல்

-அகத்தியர் குணபாடம்

சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.

இன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள். இந்த ஓமத் திரவம் ஓமத்தை காய்ச்சி எடுக்கப்படுவது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் செரியாமையைப் போக்கும் தன்மை கொண்டது.

உடல் பலம் பெற

சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள்.

இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

வயிறுப் பொருமல் நீங்க

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.

ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

புகைச்சல் இருமல் நீங்க

சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .

மந்தம்

பொதுவாக மந்தமானது சிறு குழந்தை களுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.

பசியைத் தூண்ட

நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.

பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.

சுவாசகாசம், இருமல் நீங்க

காற்றும், நீரும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருந்தால்தான் மனித இனம் உயிர்வாழ முடியும். தற்போதைய காலகட்டத்தில் காற்றும், நீரும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது. இந்த அசுத்தமடைந்த காற்று, நீரால் சுவாசகாசம், இருமல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும்.

ஓமம் - 252 கிராம்

ஆடாதோடைச் சாறு - 136 கிராம்

இஞ்சி ரசம் - 136 கிராம்

பழரசம் - 136 கிராம்

புதினாசாறு - 136 கிராம்

இந்துப்பு - 34 கிராம்

சேர்த்து ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் வேளைக்கு 650 மி.லி. கிராம் அளவு கொடுத்து வந்தால் இருமல், சுவாசகாசம், அஜீரணம் போன்றவை குணமாகும்.

மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும்.

ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான். ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.

ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும்.

ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.

இனியும் தாமதியாமல் ஓமம் என்னும் அருமருந்தை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளையும், உங்களையும் ஆரோக்கிய மானவராக மாற்றி நீண்ட ஆயுளோடு இனிதே வாழுங்கள்.

Tagged in:

1569
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments