Manali Keerai

by Rameshraj 2010-01-05 18:38:20

மணலிக் கீரை


மணலிக் கீரை பூண்டு இனத்தைச் சேர்ந்தது. இது தென்னிந்தியா முழுவதும் பரவிக் காணப்படும். மேலும் பஞ்சாப், சிந்து போன்ற இடங்களிலும் பரவிக் கிடக்கிறது.

மணலிக் கீரை சமையலுக்கு உகந்த கீரைகளுள் ஒன்று.

இதனை மணல்கீரை, நாவமல்லிக்கீரை என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil - Manali Keerai

Malayalam - Manalik kira

Sanskrit - Valuka

Telugu - Isuka dasari kura

Botanical Name - Gisekia pharnaceoides

இதன் இலை தண்டு அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. நம் முன்னோர்களின் மருத்துவக் கீரைகளில் மணலிக் கீரையும் இடம்பெற்றுள்ளது.

வதைமறும் நெஞ்சேறி வந்த கபம்விலகுஞ்

சீதமுட நோய்பலவுந் தீருங்காண் - போதவுள்ளே

வீறு கிருமியோடு மேவாப் பயித்தியம்போங்

கூறுமண லிக்கீரைக் கு

- அகத்தியர் குணபாடம்

வயிற்றுப் பூச்சி நீங்க

வயிற்றில் கிருமிகள் இருந்தால் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் இவை உறிஞ்சி விடுவதால், உடல் பலவீன மடைந்து காணப் படுவார்கள். பெரும்பாலும் சிறு குழந்தைகள் தான் இந்த வயிற்றுப் பூச்சியால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். மேலும் வயிற்றுப்புண், குடல்புண், அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படுவதற்கு இவை காரணமாகின்றன. இந்த வயிற்றுப் பூச்சிகளுக்கு மருந்துகள் சாப்பிட்டாலும் முழுமையாக ஒழிந்துவிடாது. இவை முற்றிலும் அறவே நீக்க மணலிக் கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கலந்து கூட்டு வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சி நீங்கும்.

மார்புச்சளி

சளியின் அபகாரம் அதிகரித்து அது மார்பு பகுதியில் சேர்ந்து சளி கட்டிக்கொள்வதால் தொடர்ந்து இருமல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. இந்த மார்புச் சளியை போக்க, மணலிக்கீரையை நன்கு நீர்விட்டு அலசி பின் அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும். அல்லது மணலிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலயில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க

பொதுவாக கீரைகள் அனைத்துமே மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. மணலிக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி வாரம் இருமுறை பாசிப்பருப்பு கலந்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

ஞாபக சக்தியைத் தூண்ட

ஞாபக மறதி மனிதன் வாழ்வை சீரழிக்கும் நோய். ஞாபக மறதிக்கு பித்த அதிகரிப்பே காரணம். மேலும் மூளைக்கு தேவையான சத்துக்கள் குறைவதால் ஞாபக மறதி உண்டாகும். இக்குறையை நீக்க மணலிக் கீரை மசியல் செய்து சாப்பிடுவது நல்லது.

குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் நீங்க

மணலிக் கீரையின் சமூலத்தை நீர்விட்டு அரைத்து 70 கிராம் அளவாக எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று நாள் அருந்தி விட்டு மறுபடியும் நான்கு நாள் இடைவெளிவிட்டு மூன்று நாட்கள் அருந்தி வந்தால் குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் நீங்கும்.

பைத்தியம் மாற

மூளை பாதிப்புள்ள குழந்தைகளுக்கு மணலிக் கீரையை மசியல் செய்து கொடுத்தால் மூளை நரம்புகள் நன்கு பலம் பெறும். இதனால் பைத்தியம் குணமாக வாய்ப்புண்டு.

ஈரல் பலப்பட

ஈரல் பாதிக்கப்பட்டாலே உடலின் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும். இரத்தம் சீர்கெடும். கண்பார்வை கோளாறுகள் உண்டாகும். ஈரலைப் பலப்படுத்த மணலிக்கீரை கசாயம் செய்து அருந்தி வரவேண்டும்.

மணலிக் கீரையை குடிநீரில் கொடுக்க மார்புச் சளி, வயிற்றுப்புண் நீங்கும்.

மணலிக்கீரை கிடைக்கும் காலங்களில் வாங்கி உண்டு அதன் முழு மருத்துவப் பயனையும் அடைந்து ஆரோக்கியமாக வாழ்வோம்.

Tagged in:

1394
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments