பெண் உருவ காய்களைத் தரும் தாய்லாந்து மரம் 'நரீபோல்' (Nareepol)
by muthu[ Edit ] 2013-10-09 12:53:49
பெண் உருவ காய்களைத் தரும் தாய்லாந்து மரம் 'நரீபோல்' (Nareepol)
பணம் என்ன மரத்திலயா காய்க்குது என்ற சொலவடை நம்மில் உண்டு. இங்கு பெண் மரத்தில் காய்க்கிறாள். நம்புங்கள். இயற்கையின் படைப்பில் இப்படியும் ஒரு விந்தை..!
எனது அலுவலக நண்பர் ஒருவர், அவருக்கு வந்த மின்னஞ்சலை எனக்கு அனுப்பினார். அதைப் பார்த்ததும் அசந்து விட்டேன். என் கண்ணை என்னாலேயே நம்பமுடியவில்லை. தாய்லாந்திலுள்ள 'நரீபோல்' (Nareepol) என்ற மரத்தின் காய்கள் அத்தனையும் பெண்களைப் போல் இருக்கின்றன. என்னால் நம்பமுடியாமலும் இருக்க முடியவில்லை.
கூகிள் தேடுபொறியில் இம்மரம் பற்றி கேட்டதில்.. 'உண்மைதான் நண்பா... நம்பு...' என்று சொல்லாத குறையாக 1000 ஆதாரங்களை நிழற்படத்துடன் என் கணினியில் துப்பியது. பார்த்தேன். அம்மரத்தில் காய்த்திருக்கும் காய்கள் அனைத்தும் அடிபிறழாமல் அப்படியே பெண்ணாக இருக்கின்றன.
தாய்லாந்து மொழியில் நரீ(Naree) என்றால் பெண் என அர்த்தமாம். போல் (Pol) என்றால் மரம் என அர்த்தமாம். பெண் வடிவ காய்கள் காய்ப்பதால் இதற்கு இப்பெயர் வந்ததாம்.
பெண் வடிவத்திலுள்ள காய்கள்... ஏதோ மாங்காய் தொங்குவது போல தொங்கிக் கொண்டிருக்கின்றன. இம்மரத்தை நேரில் பார்க்க வேண்டுமெனில் பேங்காக்கிலிருந்து 500 கி.மீட்டர் தொலைவிலுள்ள பெட்சாபூன் மாகாணத்திற்கு (Petchaboon province) செல்ல வேண்டுமாம்...
இணையத்தில் இதுகுறித்து கண்ணில் விளக்கெண்ணெய் விடாமல் தேடியதில் தாய்(லாந்து) மொழியிலுள்ள விக்கிபீடியாவில் தகவல் இருக்கிறது. இம்மொழி தெரிந்தவர்கள் இந்த இணைப்பை சொடுக்கினால் அப்பக்கத்தை பார்க்கலாம்.
கீழே உள்ள ஓவியங்கள் இரண்டும், தாய்லாந்தின் பழமையான ஓவியங்கள் என சொல்லப்படுகிறது. அதிலும் இந்த மரம் இடம்பிடித்துள்ளது...
(இயற்கையின் குறும்பா... இல்லை, செயற்கையாக யாராவது குறும்பு வேலை செய்து விட்டார்களா என்றும் தெரியவில்லை... சந்தேகம் இன்னும் அகலவில்லை... தாய்லாந்து நண்பர்கள் இருந்தால் கேட்டு சொல்லுங்கள்... இது குறித்து அதிகம் தகவல் தெரிந்தவர்கள், எனக்கு மின்னஞ்சல் செய்யவும்... தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்..)