கொங்கு நாடு

by Sekar 2013-10-11 09:51:19

கொங்கு நாடு

கொங்கு என்ற சொல்லுக்கு கொங்கர்நாடு,கொங்கு நாடு அல்லது கங்கநாடு என்று பொருள் ஆகும்.

தமிழ் நாட்டில் பெரும்பகுதிகளையும் கேரளா மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளையும் கொங்கு நாடு ஆட்சிப்பகுதியாகக் கொண்டிருந்தது.தமிழகத்தில், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி,நீலகிரி,கரூர், அரவக்குறிச்சி, மாயனூர்,மனவாசி, பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், கொடைக்கானல், திண்டுக்கல், திருப்பத்தூர், வாணியம்பாடி,தொட்டியம், ஜவ்வாது மலைப்பகுதி, கல்வராயன் குன்றுகள் பகுதி, கர்நாடகத்தில், கொள்ளேகால், பாண்டிபுரம் மற்றும் கேரளாவில் பாலக்காடு,கொழிஞ்சாம் பாறை,அட்டப்பாடி,மறையூர், இவை அனைத்தும் சேர்ந்த ஒரு பெரிய ஆட்சிப்பகுதியே கொங்கு நாடு ஆகும்.


கொங்குத் தமிழ்


வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் மரியாதை கொடுத்து பேசுவதே கொங்கு தமிழின் மாபெரும் சிறப்பு ஆகும்.

என்னுடைய என்பதை "என்ற" என்றும், உன்னுடைய என்பதை "உன்ற" என்றும்,
என்னடா என்பதை "என்றா..?" என்றும் சொல்லுவார்கள். அதைப்போல சாப்பிட்டுவிட்டு, குளித்துவிட்டு என்பனவற்றை சாப்டுபோட்டு, "தண்ணிவார்த்துட்டு", அல்லது "தண்ணிஊத்திக்கிட்டு" என்று கூறுவார்கள்.

ஏனுங்க, சொல்லுங்க, வாங்க, போங்க என்று எதிலும் "ங்க" என்ற மரியாதை பொருள்படும் விகுதி அல்லது பின்னொட்டு சொற்கள் போட்டு பேசுவார்கள். மிக மிக மரியாதைக்குரியவர்களிடம் பேசும் போது "ங்க" என்ற பின்னொட்டு சொல்லுக்கு பதிலாக "ங்" மட்டும் உபயோகித்துப் பேசுவார்கள். அதாவது சொல்லுங்,வாங்,போங், சரிங்,ஆமாங், இல்லீங் என்று பேசுவார்கள்.

கோவை, பொள்ளாச்சி மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் இன்னமும் புழக்கத்தில் உள்ள சில சொற்கள்,
(அகரவரிசையில்)

அக்கட்ட, அக்கட்டாலே - அந்த இடம், அந்த இடத்திலே (நீ அக்கட்டாலே போய் உட்காரு
)
அந்திக்கு - இரவுக்கு

அங்கராக்கு - சட்டை

அட்டாரி, அட்டாலி - பரண்

அப்பச்சி,அப்புச்சி- அம்மாவின் அப்பா (தாத்தா)

அப்பாரு - அப்பாவின் அப்பா (தாத்தா
)
அப்பத்தா- அப்பாவின் அம்மா (பாட்டி)

அமுச்சி - அம்மாவின் அம்மா (பாட்டி)

அப்பு - அறை. (அவளை ஓங்கி ஒரு அப்பு அப்புடா- செவுனி திரும்பற மாதிரி)

ஆகாவழி- ஒன்றுக்கும் உதவாதவன்

ஆட்டம் - போல என்று பொருள்படும் ஒரு சொல்: (அக்காளாட்டம் சும்மா இரு - அக்காளைப் போல் சும்மா இரு)

ஆத்தா, ஆயா - அப்பாவின் அம்மா

இக்கிட்டு - இடர்பாடு

இட்டேறி - தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)

இண்டம் பிடித்தவன் - கஞ்சன்

உண்டி - (sample) = மாதிரி - தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடுகொடுங்க, எப்டி இருக்குன்னு பார்க்கலாங்க,

உப்புசம் , உக்கரம் - புழுக்கம்

ஊளை - சளி பிடித்த

எச்சு - அதிகம் (எம் பேச்சுக்கு எச்சாப் பேசாத)

எகத்தாளம் - நக்கல், பரிகாசம்

எரவாரம்-கூரைக்கு கீழ் உள்ள இடம்

ஏகமாக - மிகுதியாக,பரவலாக

ஒட்டுக்கா - ஒரேயடியாக, இணைந்து (இரண்டு பேரும் ஒட்டுக்காகப் போயிட்டு வாங்க )

ஒடக்கான் - ஓணான்

ஒப்பிட்டு, ஒப்புட்டு - போளி

ஒறம்பற - உறவினர் (உறவின்மு்றை) - விருந்தினர்

ஓரியாட்டம் -சண்டை: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.

ஒருசந்தி - ஒரு வேளை மட்டும் விரதம் இருத்தல்

கட்டுத்தரை - மாட்டுத் தொழுவம்

கட்டிச்சோற்று விருந்து - கட்டிச்சாத விருந்து , வளைகாப்பு

கடைகால், கடக்கால் - அடித்தளம்

கடகோடு - கடைசி ( அந்த கட கோடியில பாரு)

கடையாணி - அச்சாணி

கரடு - சிறு குன்று

கல்யாணம் (கண்ணாலம்) - திருமணம்

குக்கு - உட்கார்

கூதல்- குளிர், கூதகாலம்- குளிர்காலம்

கொரவளை தொண்டை -குரல்வளை

கொழுந்தனார்- கணவரின் தம்பி

கோடு - "அந்தக் கோட்டிலே உட்கார்", பழைமைச்சான்று: "கோடுயர் அடுப்பு" - "பக்கம் உயர்ந்த அடுப்பு"
(புறநானூறு 164)

சாடை பேசுகிறான் - மறைமுகமாகத் தாக்கிப் பேசுகிறான்

சாங்கியம் - சடங்கு

சிலுவாடு - சிறு சேமிப்பு

சீரழி - நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)

சீராட்டு - கோபம்.

சுள்ளான் - கொசு போன்ற, சிறிய

செகுனி, செவுனி - தாடை/கன்னம்

செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி

சோங்கு - சோலைபோலும் மரஞ்செடித்தொகுதி

சேந்துதல் - தண்ணீர் இறைப்பது (கிணற்றிலே இருந்து தண்ணீர் சேந்தி வா = தண்ணீர் இறைத்துக்கொண்டு வா )

தாரை - பாதை

துழாவு - தேடு

திரட்டி (திரட்டு) - பூப்பு நன்னீராட்டு விழா (திரட்டிசீர்)

நங்கை, நங்கையாள் - அண்ணி நாத்தனார்

நலுங்கு - உடல் நலம் குன்றிய ( குழந்தைகள் உடல் நலம் குன்றி இருந்தால் மட்டுமே நலுங்கு என்ற சொல்லை புழங்குவார்கள், பெரியவர்களுக்கு இச்சொல்லைச் சொல்ல மாட்டார்கள் )


நாயம் - நியாயம் ( இவன் யோக்யத தெரியாதா.? நமக்கு நாயஞ்ச்சொல்ல வந்துட்டான் ..!)

நீச்சத் தண்ணி- பழையசோற்றுத்தண்ணி


நோக்காடு - நோய், வலி: அவனுக்கென்ன நோக்காடோ தெரியலை.

நோம்பி - திருவிழா

வட்டல் -தட்டு

புண்ணியாசனை -புதுமனை புகுவிழா

பெருக்கான் - பெருச்சாளி

பொக்கென்று - வருத்தமாக (குழந்தை பொக்குன்னு போயிருச்சு )

பொட்டாட்டம் - அமைதியாக

பொடக்காலி - புழக்கடை

பொடனி, - ( பிடரி) பின்கழுத்து

பொழுதோட- மாலைநேரம்

பொறந்தவன் - உடன் பிறந்த சகோதரர்

பொறந்தவள் - உடன் பிறந்த சகோதரரி

மச்சாண்டார் - கணவனின் அண்ணன்

கொழுந்தியாள் - கணவனின் தங்கை

மலங்காடு - மலைக்காடு

மசையன் - விவரமற்றவன்

மழைக்காயிதம் - பாலிதீன் காகிதம்

மளார் - விரைவாக, சீக்கிரம் ( மளாரென்று வா, மளாரென்று வேலையை முடி என்று அடுத்த சொல்லோடு இணைந்து தான் இச்சொல் வரும்)

முக்கு - முனை,

முச்சூடும்- முழுவதும்.

மூலை, வளைவு

வெகு - அதிக (வெகுநாளா காணோம்)

வெள்ளாமை- (வேளாண்மை ) - உழவு, விவசாயம்

வேகு வேகுன்னு- அவசரஅவசரமாய்

சீக்கு - நோய்

பன்னாடி - கணவன், முதலாளி (பண்ணைக்கு சொந்தக்காரன்)

கொழு -ஏர்மனை

கொடாப்பு ‍- கோழிகளை அடைத்து வைக்கப் பயன்படும் பெரிய கூடை (தென் மாநிலங்களில் பஞ்சாரம் என்று சொல்லப்படும்)

ரக்கிரி -கீரை.
369
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments
Guna

அங்கராக்கு - This is telugu :)

Sekar

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு இவை ஐந்தும் முக்கிய திராவிட மொழிகளாகும். ஆக, இந்த வார்த்தை தெலுங்கில் இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் உண்டோ..?