கிளென் கன்னிங்காம் (Glen Cunningham) என்னும் எட்டு வயது சிறுவன் தினமும் தான் படிக்கும் பள்ளிக்கு மற்ற எல்லாரையும் விட சீக்கிரமாய் வந்து, குளிர்காலத்தில் தான் படிக்கும் வகுப்பை, விறகு மற்றும் மண்ணெண்னை கொண்டு, வகுப்பில் உள்ள விறகடுப்பை(fire place) சூடுப்படுத்தி, மற்றவர்கள் வரும்போது கதகதப்பாய் வைப்பது வழக்கம். அப்படி அவன் ஒரு நாள் செய்யும்போது, யாரோ மண்ணெண்ணைக்கு பதிலாக பெட்ரோலை நிரப்பியிருந்தபடியால், நெருப்பு பட்டவுடன் அது வெடித்து, அந்த பள்ளியே பற்றி எரிய ஆரம்பித்தது. பாதி உயிருடன், மூச்சுப்பேச்சில்லாமல் இருந்த கிளெனை மற்றவர்கள் வெளியில் எடுத்து, ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்கள்.
.
வைத்தியர்கள் அங்கு அவனை பார்த்து, இடுப்புக்கு கீழே முற்றிலும் எரிந்து போய் விட்டது. ஆகவே இவன் உயிரோடு இருப்பதிலும், சாவதே மேல். அப்படி உயிரோடு இருந்தாலும் அவனால் எழுந்து நடக்கவே முடியாது, ஆகவே காலை வெட்டி எடுத்து விடலாம் என்று அவனுடைய தாயாரிடம் கூறிவிட்டார்கள். அதற்கு அவனுடைய தாயார் காலை வெட்டி எடுக்க ஒத்துக் கொள்ளவில்லை.
அதை கேட்டுக் கொண்டிருந்த கிளெனுக்கு சாவது பிடிக்கவில்லை.'நான் ஒரு நாளும் இப்படி படுத்துக் கொண்டிருக்க போவதில்லை, நிச்சயமாக நடக்க போகிறேன்' என்று தீர்மானித்தவனாக, இடுப்புக்கு கீழ் செயலிழந்த தன் கால்களை நோக்கி பார்த்தான். அவனுடைய தீர்மானம் உறுதியாக இருந்தபடியால் மருத்துவமனையிலிருந்து சீக்கிரமாய் குணமாகி வீடு வந்து சேர்ந்தான்.
அவனுடைய தாயார் அவனது காலை, தினமும் நீவிவிட்டு, அழுத்தி தேய்த்து, பின், அவனை வீல் சேரில் உட்கார வைத்து அவர்கள் வீட்டை சுற்றி வருவது வழக்கம். ஒரு நாள் அப்படி அவன் செல்லும்போது, வீல் சேரிலிருந்து தன்னைதானே கீழே விழச் செய்து, தன் கால்களை தேய்த்தபடி அவன் வீட்டை சுற்றியுள்ள வேலியைச் சுற்றிலும் செல்ல ஆரம்பித்தான். தினமும் அப்படியே செய்ய ஆரம்பித்தான். எப்படியாவது நடக்க வேண்டும் என்கிற வெறி அவனுக்குள் வந்தது. அவன் அப்படி செய்ய செய்ய அவனுடைய கால்களுக்குள் சக்தி வந்து, அவனை நிற்க வைத்தது. முதலில் நிதானமாக நடந்து, பின் வேகமாக நடந்து, அதன்பின் அவன் ஓட ஆரம்பித்தான். அவன் பள்ளிக்கு ஓடியே செல்ல ஆரம்பித்தான். அதன்பின் அவன் காலேஜில் சேர்ந்தபோது, ஒரு ஓடுகின்ற குழுவையே இவன் ஆரம்பித்தான்.
.
1934 ஜுன் மாதம் 16ம் தேதி ஒரு மைல் தூரத்தை 4:06.8 நிமிடங்களில் வேகமாக ஓடி, உலக சாதனையையே முறியடித்தான். இடுப்புக்கு கீழே செயலிழந்து போன ஒருவரால் விடாத தன்னம்பிக்கையுடன் ஓடி, உலக சாதனையையே முறியடிக்க முடியும் என்றால், அது நிச்சயம் அவருக்குள் இருந்த வைராக்கியமும், தன்னம்பிக்கையும்,முயற்சியும் தானே ..!
இவரைப்பற்றி மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Glenn_Cunningham_(athlete)